முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்-

நீதி விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண சைவக் குருக்கள் கோரிக்கை

பௌத்த பிக்குகளின் செயற்பாட்டைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
பதிப்பு: 2019 செப். 27 20:42
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 28 22:40
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#Humanrights
#mullaitivu
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து சர்ச்சையை ஏற்படுத்திப் பின்னர் நோயினால் உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை ஆலயத்தின் தீர்த்தக்கேணியடியில் தகனம் செய்தமையைக் கண்டித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள கிழக்கு இலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளியிட்டனர். தமிழ்ச் சட்டத்தரணிகளையும் தமிழ் மக்களையும் பௌத்த பிக்குமார் தாக்கி அச்சுறுத்தியமைக்கும் கண்டனம் தெரிவித்தனர். மட்டக்களப்பு காந்திப் பூங்காவிற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் கலந்துகொண்டு அமைதியான முறையில் தமது கண்டனத்தை வெளியிட்டனர்.

ஈழ தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தையும் சைவ சமயத்தையும் அவமதிக்கும் முறையில் பௌத்த பிக்குமார் செயற்பட்டுள்ளதாகவும் உடனடியாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையில் ஏற்கனவே நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள் பௌத்த பிக்குமார் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை உதாசீனம் செய்தமையினால் இலங்கை நீதித்துறைச் செயற்பாடுகளில் மேலும் நம்பிக்கையற்ற தன்மை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

திருகோணமலை கன்னியாவிலும், முல்லைதீவிலும் நடைபெற்ற நீதிக்கு மாறான சம்பவங்கள் தமிழ்ச் சமூகத்தையும் சைவ சமயத்தையும் தொடர்ச்சியாக அவமதித்து வருகின்ற செயற்பாடுகளாகவே தாம் கருதுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய இந்துக்குருமார் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.