இலங்கைத்திவில் உள்ள

சகல மாவட்டங்களும் பௌத்த பிரதேசம்- ஞானசார தேரர்

கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றால் நல்லது என்றும் கூறுகிறார்
பதிப்பு: 2019 ஒக். 02 21:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 02 22:23
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#buddhist
இலங்கைத்தீவில் உள்ள இருபத்து ஐந்து மாவட்டங்களும் பௌத்த பிரதேசம் என்று அத்தே ஞானசார தேரரை மையப்படுத்திய பொதுபலசேன அறிவித்துள்ளது. உரிமைக்கு உரிமை என்ற புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கொழும்பின் புறநகர் பகுதியான பொறலெஸ்கமுவவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஞானசார தேரர் இலங்கைத்தீவு பௌத்த நாடு என்றும் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார். உரிமைக்கு உரிமை என்ற புதிய கட்சி பெதுபலசேனவின் மற்றுமொரு செயற்பாட்டு இயக்கம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
 
இலங்கைத்தீவில் உள்ள இருபத்து ஐந்து மாவட்டங்களும் பௌத்த பிரதேசம் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுமென்றும் தெரிவித்த தேரர், விசேட பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்படும் எனவும் கூறினார்.

அனைத்து மாவட்டங்களும் பௌத்த பிரதேசம் என பிரகடனப்படுத்தும் இலங்கை அரச வர்த்தமானி இதழ் முதற் கட்டமாக வெளியிடப்படும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பௌத்த பிக்குமார், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிங்களப் புத்திஜீவிகள் மற்றும் சில பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். தொழிற் சங்கப் பிரதிநிதிகள் சிலரும் பங்குபற்றினர்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைந்தால் இலங்கைத்தீவுக்கு நல்லது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப்' பெரமுனக் கட்சிக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்று ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஆனாலும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற முடிவை பொதுபலசேன இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் விரைவில் தமது முடிவு சிங்கள மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் ஞானசார தேரர் கூறினார்.

இலங்கை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனைப் பெற்றிருந்த ஞானசார தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு அடிப்படையில் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்திலும் நீதிமன்றக் கட்டளையை மீறி ஞானசார தேரர் செயற்பட்டிருந்தார். சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தார்.