கோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமைக்கு எதிரான மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் புதன்கிழமை ஆரம்பித்து நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழு இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் குடியுரிமை சட்டவலுவுடையதெனக் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய பின்னர், கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவருடை இல்லத்திற்குச் சென்று சந்தித்துக் கட்டியணைத்து மகிழ்ச்சி தெரிவித்தபோது எடுக்கப்பட்ட படம் இது.
ஓகஸ்ட் ஐந்தாம் திகதி இலங்கைப் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே கடந்த வாரம் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்று வழங்கப்படும் தீர்ப்பில் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டால் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட முடியாதென எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அவருடைய சகோதரரான சமல் ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.