வடமாகாணம்

யாழ் கோட்டையில் விகாரை- இலங்கை இராணுவம் முயற்சி

தற்காலிகமாகக் கைவிடப்பட்டாலும் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை
பதிப்பு: 2019 ஒக். 05 13:50
புதுப்பிப்பு: ஒக். 06 00:34
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#genocide
#jaffna
வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் புத்தர் சிலை வைத்தல். விகாரை கட்டுதல் போன்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களும் சிவில் அமைப்புகளும் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைத்தல் போன்ற பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தநிலையில் யாழ்ப்பாணம் கோட்டையில் நிலை கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் புதிதாக புத்த விகாரையொன்றை அமைப்பதற்கு இரகசியமாக நடவடிக்கை எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
 
இதனால் விகாரை அமைக்கும் பணியை இராணுவத்தினர் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர். எனினும் கொழும்பு நிர்வாகத்தின் உத்தரவுடன் மீண்டும் விகாரை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகலாமெனவும் உடனடியாகத் தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுமாறும் மக்கள் தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் கோரியு்ள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளில் முகாம் அமைத்துத் தங்கியுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டுமானால் கோட்டைப் பகுதியைத் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை இராணுவம் கோரியிருந்தது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுக் கோட்டையில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இதுவரை அங்கிருந்து இராணுவம் வெளியேறவில்லை.

யாழ் கோட்டையில் பலாத்காரமாக தங்கியுள்ள இலங்கை இராணுவத்தினர் அங்குள்ள ஆலமரம் ஒன்றின் கீழ் கடந்த ஆண்டு சிறிய விகாரை ஒன்றைக் கட்டியிருந்தனர். தற்போது அந்த விகாரையைப் பெரிதாக மாற்றியமைத்து அதற்குரிய கட்டடங்களையும் கட்டுவதற்கு இரகசியமாகத் தயார்படுத்தி வருகின்றனர்.

எனினும் பொது மக்களின் கடும் எதிர்ப்பினால் தற்காலிகமாக அந்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் குறித்த காணியில் உள்ள அந்த சிறிய விகாரையை புனரமைத்துப் பெரியதாகக் கட்டுவதற்கான முயற்சிகளை பௌத்த பிக்குமார் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டுமென மக்கள் கோரியுள்ளனர். சிவில் அமைப்புகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழர்களின் மரபுரிமைச் சின்னமான கோட்டை அமைந்துள்ள பகுதியைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதியை பௌத்த மயமாக்கல் செய்யும் நோக்கில் ஆய்வுகள், கலந்துரையாடல்கள் எதுவுமேயின்றி நூற்றி 67 இடங்கள் பௌத்த சின்னங்களாக இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான விஜயகுமார் நவநீதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.