வடமாகாணம் கிளிநொச்சி மலையாளபுரத்தில் வாழும்

செஞ்சோலைக் குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு

கரைச்சிப் பிரதேச செயலக அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஒக். 06 18:36
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 08 00:26
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#genocide
#humanrights
வடமாகாணம் கிளிநொச்சி மலையாளபுரம் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டிருந்த செஞ்சோலையைச் சேர்ந்த ஐம்பத்தி நான்கு குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கரைச்சிப் பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் செயற்படும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் கிளை அலுவலகத்தின் ஆலோசணைக்கு அமைவாகவே கரைச்சிப் பிரதேச செயலகம் உத்தரவிட்டுள்ளது. செஞ்சோலையில் சிறுவர்களாக இருந்து வளர்ந்து பின்னர் குடும்பமாகிய பிள்ளைகளே குறித்த பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் 15.10.2019 க்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டுமென கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கு வாழும் செஞ்சோலைப் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
 

இந்தப் பிள்ளைகள் குடும்பமாகி வாழும் காணியில் இலங்கைப் படையினர் முன்னர் முகாம் அமைத்திருந்தனர். ஆனாலும் அழுத்தங்களினால் இராணுவம் அங்கிருந்து வெளியேறியிருந்தது.

பின்னர் செஞ்சோலையில் வளர்ந்து திருமணம் செய்து குடும்பமான பிள்ளைகள் அந்தக் காணியில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். குறித்த காணியும் அவர்களுக்கென்றே கரைச்சிப் பிரதேசச் செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக மலையாளபுரம் காணியை செஞ்சோலையிலிருந்து வளர்ந்து குடும்பங்களாக அங்கு குடியேறியுள்ள பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என 11.04.2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்துக்கு அமைவாகவே செஞ்சோலையில் வளர்ந்து குடும்பமாகிய பிள்ளைகளுக்கு அந்தக் காணி நிரந்தரமாக வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பதினாறு குடும்பங்கள் மலையாளபுரம் பகுதியில் உள்ள குறித்த காணிகள் தங்களுக்குச் சொந்தமானவை என்று உரிமை கோரியுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டிருந்தனர்.

காணிகள் தமக்குச் சொந்தமானவை என்று உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தனர். ஆவணங்களின் அடிப்படையில் காணிகள் அவர்களுக்குரியவை என்று மனித உரிமைக்குழு அதிகாரிகள் கரைச்சிப் பிரதேச செயலகத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இதனால் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறும், இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதேச செயலகம் நேற்றுச் சனிக்கிழமை செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் செய்வதறியாது குறித்த காணியில் குடும்பமாக வாழ்ந்து வந்த செஞ்சோலைப் பிள்ளைகள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது காணி என்று உரிமை கோரும் 16 குடும்பங்களில் பலருக்கு இந்தக் காணிக்குப் பதிலாக வேறு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலும் மீண்டும் அந்தக் காணியை தம்முடையது எனக் கோருவதாகவும் பாதிக்கப்பட்ட செஞ்சோலைக் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கரைச்சி செயலக அதிகாரிகளுக்குத் தெரியும் என்றும் கரைச்சிப் பிரதேச செயலக அதிகாரிகளின் ஏற்பாட்டிலேயே மலையாளபுரம் காணியில் செஞ்சோலைக் குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.

குறித்த காணி செஞ்சோலைக்குாியதென்று 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான சூழலில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில தீய சக்திகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அதுவும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக குடிமர்த்தப்பட்டிருந்த செஞ்சோலைக் குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் உண்மை நிலையை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறவில்லையென்றும் செஞ்சோலைக் குடும்பங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.