கிழக்கு மாகாணத்தில்

அதிபர் நியமனத்தில் தமிழ் பேசும் சமூகத்திற்கு அநீதி- பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு

கொழும்பில் ஒன்றுகூடி சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்
பதிப்பு: 2019 ஒக். 06 22:44
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 09:43
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#teachers
#humanrights
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் சமூகத்திற்கான பாடசாலை அதிபர் நியமனத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் அதிகாரிகளின் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளினால் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அதிபர்களில் ஒருவர் நா.நரேந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தார். அண்மையில் வெளியாகிய கடந்த அதிபர் தரம் 111 க்கான நியமனத்தில் தமிழ் மொழியில் இருப்பவர்கள் ஐநூற்றிப் பத்துப் பேருக்கான நேர்முகப் பரீட்சைக்கான தகுதிகாண் கிடைத்திருந்தது. ஆனால் நூற்றி 60 பேர் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அநீதியென அவர் கூறினார். இதனால் அதிபர் சேவைக்கு எதிர்பார்த்திருந்த பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.


 
நேர்முகப் பரீட்சை தேர்வில் உள்ள அனைவரும் இலங்கையில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிச்சயமாக நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.

இறுதியில் இந்த ஐநூற்றிப் பத்து தமிழ்மொழி மூலமாக தெரிவானவர்களில் 160 பேர் தான் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தமிழ் மொழி மூல அதிபர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.

முதலில் தமிழ் மொழி மூலத்தில் முந்நூற்றி 60 பேர் தமிழர்கள் 160பர் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இறுதியில் தமிழர்களும் முஸ்லிம்களுமாகச் சேர்ந்து 160 பேர் மாத்திரமே அதிபர் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தில் இன விகிதாசாரம் கவனிக்கப்படவேயில்லை.

இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் கூறப்பட்டுள்ளவாறு நியமனங்கள் இடம்பெறவில்லை. இலங்கை அதிபர் சேவை நியமனங்கள் பொதுவாக சிங்கள மொழி ரீதியாகவும் தமிழ் மொழி ரீதியாகவும் தனித்தனியே வெற்றிடங்கள் கணிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே இப்பதவிக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த வர்த்தமானியில் தமிழ்மொழி மூலமாகவும் சிங்கள மொழி மூலமாகவும் நியமனங்களுக்கான வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும் அதிபர் சேவை பிரமாண விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதனை திட்டமிட்ட அரசியல் நியமனமாகவே பாதிக்கப்பட்ட அதிபர்கள் கருதுகின்றனர். எனவே இந்த நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்துத் தமிழ்மொழி மூலமாகத்தான் இந்த நியமனத்தை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட அதிபர்கள் அனைவரும் கொழும்பில் ஒன்று கூடி ஆராய்ந்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நரேந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தார்