வடமாகாணம் முல்லைத்தீவு நிராவியடி

பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம்- அரசாங்கம் பதிலில்லை

பௌத்த பிக்குமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தன் கோரிக்கை
பதிப்பு: 2019 ஒக். 08 22:50
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 08 23:21
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#buddhist
#Sl
#parliament
வடமாகாணம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளவுக்குள் விகாரை அமைத்து சர்ச்சையை ஏற்படுத்திய மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை ஆலயத்தின் தீர்த்தக் கேணியடியில் தகனம் செய்தமை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ் கந்தராஜா சபை ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்து விவாதித்தார். ஆனால் அரசாங்கத்தரப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக மாத்திரமே சபையில் இருந்தார். வேறு எந்த அமைச்சர்களும் சபையில் இருக்கவில்லை. எதிர்த்தரப்பிலும் ஆனந்த அழுத்கமகே என்ற மகிந்த தரப்பு உறுப்பினரைத் தவிர வேறு எவரும் ஆசனங்களில் இருக்கவில்லை.
 
ஆசனங்கள் அனைத்தும் வெறுமையாகக் காணப்பட்ட நிலையிலும் சம்பந்தன் தொடர்ந்தும் உரையாற்றினார்.

முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையை பொதுபல சேனவின் செயலாளர் அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குமார் மீறியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களுக்கு அரசாங்கத்தரப்பில் இருந்து பதில் வழங்கப்படவில்லை.

இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் நாடாளுமன்றம் ஆரம்பமாகியதும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அனுமதியோடு முல்லைத்தீவு விவகாரம் தொடர்பாக சம்பந்தன் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தமிழ் மக்களின் பாரம்பரியங்கள் மதிக்கப்படவில்லை என்றும் பௌத்த பிக்குமாரும், இலங்கைப் பொலிஸாரும் சைவ மக்களின் பிள்ளையார் ஆலய வளாகத்தை மாசுபடுத்தியுள்ளதாகவும் சம்பந்தன் குற்றம் சுமத்தினார்.

நீதிமன்றக் கட்டளையை மீறிச் செயற்பட்ட பௌத்த பிக்குமாரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அரசாங்கம் பதில் வழங்கவில்லை.

சம்பந்தன் உரையாற்றியபோது நாடாளுமன்றத்தில் அரசதரப்பு, எதிர்த்தரப்பு ஆசனங்கள் வெறுமையாகவே காணப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே சபையில் இருந்தனர்.

சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய சாந்தி சிறிஸ்கந்த ராஜா, பௌத்த பிக்குமாரின் அடவாடித்தனங்கள் தொடர்பாக எடுத்துக் கூறினார். இலங்கை நீதித்துறையில் நம்பிக்கையில்லை என்றும் பௌத்த தேரரர்கள் நீதித்துறைக்குக் கட்டுப்பட்டவர்கள் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய ஒரேயொரு சிங்கள உறுப்பினர் ஆனந்த அழுத்தகமகே, முல்லைத்தீவு நிராவியடிப் பிள்ளையார் ஆலயப் பி;ரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று கூறினார்.

தேரரின் உடலை தகனம் செய்வது தொடர்பான பிரச்சினையை பௌத்த தேரர்கள் சுமுகமாகத் தீர்த்து வைத்திருப்பார்கள் என்றும் கூட்டமைப்பு தமது அரசியல் தேவைக்காகவே பிரச்சினையைப் பெரிதுபடுத்தியதாகவும் கூறினார்.