இலங்கை ஒற்றையாட்சி அரசின்

கல்விச் செயற்பாடுகளில் குறைபாடுகள்- மட்டக்களப்பு வாகரை மாணவர்களின் அவலம்

அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லையென முறைப்பாடுகள்
பதிப்பு: 2019 ஒக். 09 06:09
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 23:12
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் கல்வி அமைச்சு கிழக்கு மாகாணப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று பெற்றோர் குறை கூறுகின்றனர். கட்டட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை எனவும் பெற்றோர் ஆசிரியர்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையைத் தொடருவதற்கு போதுமான கட்டட வசதிகளின்றிப் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அனைத்து பாடசலைகளின் பௌதீக வளங்கள் போரினால் பாதிக்கப்பட்டன.
 
இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பின்னடைவை எதிர்நோக்கியது. போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை உரிய முறையில் கற்பிக்க முடியவில்லையெனக் கூறி கவலை வெளியிட்டுள்ளனர்.

கல்குடா கல்வி வலயத்தின் கனிஷ்ட பாடசாலைகளில் அதிக மாணவர்களை கொண்டுள்ள கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் கடந்த 2012ஆண்டு ஒரு நிரந்தரகட்டிடத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2017ஆண்டின் இறுதிப்பகுதியில் இப்பாடசாலைக்காக கற்றல் வளநிலையம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு மாடிக்கட்டிடம் புதிதாக கிடைத்து வேலைகள் தொடங்கப்பட்டது. ஆனால், இரண்டு வருடங்கள் கடந்த போதிலும் இன்றுவரை பூர்த்திசெய்யப்படவில்லை.

இது தொடர்பாக கூர்மைச் செய்தித் தளம், கல்குடா வலயக்கல்வி, கல்வி பணிப்பாளர் தி.ரவியிடம் தொடர்பு கொண்ட போது, குறிப்பிட்ட சில வலயங்களில் மாத்திரமல்ல மாவட்டத்திலுள்ள அனைத்து வலயங்களிலும் இவ்வாறு அரைகுறையான வேலைகள் பாடசாலைகளில் காணப்படுவதினால் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

கட்டடங்களை நிர்மானிக்கும் ஒப்பந்தக்காரர்களின் செயற்பாடுகளினால் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. எனினும், இப்பணிகளை இன்னும் மூன்று நான்கு மாதகாலத்தில் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் கட்டிடவேலைகள் ஏன் முடிவுறாமல் உள்ளன என கேட்டபோதும் ஒழுங்கான பதில்கள் கிடைக்கவில்லையென வாகரைப் பிரதேச சபை தவிசாளர் சி. கோணலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறினார். இனிவருவது மழைக்காலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது சட்டத்தினை நாடவேண்டிய நிலைக்கு மக்களை தள்ளிவிடவேண்டாம் என்பதை பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு பொறுப்புடன் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பாடசாலை மாணவர்கள் கற்றல்மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பல்வேறுபட்ட சாதனைகளைப் படைத்துப் பெருமை சேர்த்துள்ளனர். துரதிஷ்டமாக அவர்களுக்கான கற்றலுக்காக பௌதீக வளங்கள் மேற்கொள்ளாமை கவலைக்குரியது என்றும் கூறினார்.