இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

சஜித் பிரேமதாசவின் உரையில் இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி எதுவுமேயில்லை

இனவாத கோசங்களைத் தவிர்க்கும் நோக்கில் மனோ, ஹக்கீம் உரையாற்றவில்லை
பதிப்பு: 2019 ஒக். 11 10:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 14 22:05
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#ranilwickremesinghe
#SajithPremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பல இலட்சம் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் மூத்த உறு;ப்பினர்கள் பலரும் கூட்டத்தில் உரையாற்றினர். வேட்பாளர் தெரிவின்போது சஜித் பிரேமதாசவுக்கு எதிராகச் செயற்பட்ட ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக பெருந்திரளான மக்கள் வாகனங்களில் காலி வீதியூடாக காலி முகத்திடலை வந்தடைந்தனர்.
 
இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதி என்றார். இறுதியாக உரையாற்றிய சஜித் பிரேமதாச, இலங்கையின் இறைமையை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியதுடன் இலங்கையின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் சொன்னார்.

பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறிய சஜித் புத்தபெருமானின் கட்டளைகளை நிறைவேற்றுவேன் எனவும் கூடியிருந்த மக்கள் முன்னிலைiயில் சூழுரைத்தார்.

சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றிய சஜித் பிரேமதாச எந்தவொரு இடத்திலும் இனப்பிரச்சினைத் தீர்வு என்றோ வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் என்றோ எந்தவொரு வார்த்தைகளையும் கூறவில்லை.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றோ அல்லது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றோ எதுவுமே கூறவில்லை.

ஆனால் தமது கட்சிக்கு ஆதரவு வழங்கும் மலையகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் ஆதரவு பற்றிக் கூறியிருந்தார். எனினும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களான மனோ கணேசன், ஹக்கீம், ரிஷரட் பதியுதீன் ஆகியோர் உரையாற்றவில்லை.

கூட்டத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலர் எழுப்பிய இனவாதக் கோசங்களினால் இவர்கள் உரையாற்றவில்லையென அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை. சரத் பொன்சேகாவிடமே இலங்கையின் பாதுகாப்பு கையளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சராக அவரை நியமிப்பேன் எனவும் சஜித் பிரேமதாச தனது உரையில் கூறினார்.

இந்தக் கூட்டத்தை முன்னிட்டு பெருமளவு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கொழும்பு நகர வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.