கிழக்கு மாகாணம்

அம்பாறை மாவட்டத்தில் பதின்நான்கு தமிழ்க் கிராமங்கள் அழிப்பு

அகில இலங்கைப் பொது ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஒக். 13 16:08
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 13 20:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#east
#amparai
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருப்பதாக அகில இலங்கைப் பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் முன் வருவதில்லை என்றும் அவர் கூறினார். அம்பாறை மாவட்டத்தில் பதின்நான்கு தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் லோகநாதன் கூறினார். கிளிநொச்சியில் நேற்றுச் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது. நிகழ்வின் நிறைவில் ஊடகங்களிற்கு அவர் கருத்து வெளியிட்டார்.
 
அம்பாறை மாவட்டத்தில் பதின்நான்கு தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை.

நாங்கள் அரச ஊழியர்களாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றோம். தமிழ் அரசியல் பிரதிநிதிகளைவிட எங்களுக்கே மக்களின் பிரச்சினை கூடுதலாகத் தெரியும் என்றும் கூறினார்

வடக்குக் கிழக்கு என்ற பேதமின்றியே நாங்கள் மக்களுக்குச் சேவை செய்து வருகின்றோம். அரச ஊழியர்கள் என்ற அடிப்படையில் மக்களோடு மக்களாகவே நாங்கள் சேவை செய்கின்றோம். ஆனால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அம்பாறை மாவட்டப் பிரச்சினைகள் தொடர்பாக பேச அழைத்தாலும் அவர்கள் வருவதில்லை என்று கூறிய அவர் தமிழ் அரசியல் பிரதிநிதிகளை இனிமேல் நம்ப முடியாதென்றும் கூறினார்.

கல்முனைப் பிரதேசசபைத் தரம் உயர்த்துதலிலும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது அகில இலங்கைப் பொது ஊழியர் சங்கம் கடுமையாக உழைத்தது.

ஆனால் கிழக்கு மாகாணத்தின் நெருக்கடிகள் இன்றுவரை தீரவில்லை. தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கிழக்கு மாகாணப் பிரச்சினைகளில் அக்கறையிருப்பதாகத் தெரியவுமில்லை என்று லோகநாதன் கூறினார்.

அகில இலங்கைப் பொது ஊழியர் சங்கம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.