கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

கட்டுமுறிவுக்குளம் பாடசாலையில் வளங்கள் இல்லை- அதிபர்

கொழும்பு நிர்வாகம் புறக்கணிப்பதாகவும் கூறுகின்றார்
பதிப்பு: 2019 ஒக். 26 04:17
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 27 04:03
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#Humanrights
கொழும்பில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இலங்கைச் சிங்கள ஆட்சியாளர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முன்னேற்றுவற்கு எடுத்த நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்று அதிபர்கள், ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நகர்ப்புற பாடசாலைகளில் மாத்திரமே மேலும் மேலும் வளங்களை குவி்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேசச் செயலகப் பிரிவு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட, போர்க்காலத்தில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்டுமுறிவுக் குளம் அ.தக.பாடசாலையில் எந்த வளங்களுமே இல்லையென அதிபர் நாகேந்திரன் கூர்மைச் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
 

பாடசாலையில் 14 ஆசிரியர்களும், 181 மாணவர்களையும் கொண்ட மட்டு கட்டுமுறிவு அ.த.க பாடசாலையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையுடன் இயங்கும் இப்பாடசாலையில் போதியளவு பௌதீக வளங்கள் இன்றி இயங்குவதாக பாடசாலை அதிபர் நாகேந்திரன் தெரிவித்தார்.

ஆண்டு ஒன்று தொடக்கம் க.பொ.த சாதாரண தரத்தில் உள்ள போதிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு தனித் தனி வகுப்பு இல்லாமையினால் மாணவர்களை ஒன்றாக வைத்து கற்பிக்க வேண்டியுள்ளது.

போர்க்காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது மாணவர்கள் கல்வியில் ஆர்வமாக கற்கின்றார்கள். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் மாணவர்கள் 80 புள்ளிகளைப் பெற்று பாடசாலை 82 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

2012ஆம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறு 67 வீதமாக உள்ளது எனினும் இம்முறை சிறந்த பெறுபேறை எதிர்பார்க்கிறோம். மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்ல வேண்டுமாகயிருந்தால், ஒரு நாளைக்கு 200 ரூபா செலவு செய்துதான் போய்வரவேண்டியுள்ளது. யானைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போக்குவரத்து செய்ய வேண்டும் என்றார்.

உலகம் இன்று கணனி மயமாக்கப்பட்ட நிலையில் இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு போதியளவு கணனியில்லை. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்கான நூலக வசதிகள் இல்லை. விஞ்ஞான ஆய்வு கூடம் இல்லை. இப்பிரதேசத்தை பொறுத்தவரையில் கணனி கற்கை நெறி நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுத்தால் இப்பகுதி மாணவர்களும் கணனி அறிவைப் பெற்றுக் கொள்வர்.

கல்வி செயற்பாட்டைத் தவிர பிறவிதானச் செயற்பாடான விளையாட்டுகளை நடாத்துவதற்கு மைதானமும் சீர் செய்யப்பட வேண்டும் என்பதுடன், விளையாட்டு உபகரணங்களும் இல்லை என்றார்.

கட்டுமுறிவு கிராமம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் காட்டு விலங்குகளின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதனால், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியினால் மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதற்காக, காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இரவு வேளையிலும் கற்பித்தல் செயற்பாடு இடம்பெறுகிறது.

பாடசாலைக்கு சுற்றுமதில் அமைப்பதனூடாக இந்த விலங்குகளின் தாக்கத்திலிருந்து மாணவர்களையும் பாடசாலையின் வளத்தையும் பாதுகாக்க முடியும். அத்துடன், பாடசாலையின் அபிவிருத்திக்காக பழையமாணவர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதினால் எதிர்காலத்தில் இப்பாடசாலை நல்ல நிலைக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை அதிபர் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.