இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

சவேந்திர சில்வா தொடர்ந்தும் இலங்கை இராணுவத் தளபதி- சஜித் பிரேமதாச

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாதென்றும் கூறுகிறார்
பதிப்பு: 2019 ஒக். 28 12:55
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 28 23:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
#sajithpremadasa
எவ்வாறான சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டாலும் இலங்கையின் இராணுவத் தளபதியாக பெல்ரினட் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்ந்தும் பதவி வகிப்பாரென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நிவத்திகலப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் சவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பார் என்றும் புதிய தளபதி நியமிக்கப்படமாட்டாரெனவும் சஜித் பிரேமதாச அங்கு கூறினார்.
 
போர்க் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சவேந்திர சில்வா மீது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள், விமர்சனங்களை முன்வைத்திருந்தன.

சவேந்திர சில்வாவின் நியமனத்தால் இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்புகள், மற்றும் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்தது. இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு இலங்கையின் இறைமையை விட்டுக் கொடுக்க முடியாதென்றும். இலங்கை இராணுவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த முடியாதென்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தபோதே இறுதிப் போர் இடம்பெற்றது. அவருடைய உத்தரவின்படியே இனப்படுகொலைகள் இடம்பெற்றதாகத் தமிழ்த் தரப்புக் குற்றம் சுமத்தி வருகிறது.

ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதைத் தடுக்க முடியாத அல்லது விமர்சனம் செய்ய விரும்பாத ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேசப் பொது அமைப்புகள், சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவத் தளபதியாகப் பதவியேற்றதும் கண்டனம் தெரிவித்தமை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்தன.

அதேவேளை, சிங்கள பௌத்த தேசியவாத மன நிலையிலேயே சஜித் பிரேமதாச தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார். பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பௌத்த தேசியத்தை ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவதையும் அவதானிக்க முடிகிறது.