வடமாகாணம் முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

நீதிமன்ற அனுமதியோடு அகழ்வுப் பணிகள் தொடருகின்றன
பதிப்பு: 2019 ஒக். 30 10:13
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 31 13:30
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#mullaitivu
போர் நடைபெற்ற வடமாகாணம் முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அகழ்வுப் பணிகள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மீண்டும் இடம்பெற்றது. இன்று புதன்கிழமையும் அகழ்வுப் பணிகள் தொடருகின்றன. புதுக்குடியிருப்புப் பிரதேசச் செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 2019.10.20 ஆம் திகதியன்று தோட்ட காணி ஒன்றைத் துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்புப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து சென்ற 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
 
அப்போது மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் சிலவற்றை மீட்புப் பணியாளர்கள் மீட்டிருந்தனர். நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது மண்டையோடு உள்ளிட்ட சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

மீட்கப்பட்ட மண்டையோடு ஆண் ஒருவருடையதென சட்ட மருத்துவ அதிகாரி கூறினார். கடும் மழைக்கு மத்தியிலும் அகழ்வுப் பணிகள் தொடருகின்றன. நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.

சட்ட மருத்துவ அதிகாரி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அகழ்வுப் பணியைப் பார்வையிடுகின்றனர்.

மன்னார் நகர நுழைவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இரு நூறுக்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஆய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாகப் பலரும் கூறியிருந்த நிலையில் அது பற்றிய விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் இருந்தும் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் பற்றிய விசாரணைகள் அப்படியே மூடி மறைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. இந்தப் பணிகளைப் பார்வையிட சுயாதீனமான குழுக்கள் எதுவும் இலங்கையில் இல்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.