இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

சஜித், கோட்டா குறித்து விசாரணை செய்யும் இந்தியப் புலனாய்வு- சிங்கள வார இதழ் தகவல்

யாழ், அம்பாந்தோட்டை துணைத் தூதரகங்கள் மூலமாக நடவடிக்கை எனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2019 நவ. 02 20:38
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 02 21:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
#SajithPremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான சிங்கள அரசியல் கட்சியின் இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் குறித்து இந்திய உளவுப் பிரிவான றோ பல்வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் திவயின வார இதழில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றியே இந்திய உளவுப் பிரிவான றோ விசாரணை செய்து வருவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. திவயினப் பத்திரிகையின் ஞாயிறு வார இதழ் இன்று சனிக்கிழமை வெளியாகியுள்ளது. அந்த வார இதழ் குறித்த விடத்தை தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்துள்ளது.
 
யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்தியத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், றோ அமைப்பிற்குத் தமது விசாரணைகளை மேற்கொள்ள இலகுவாக இருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றோ அமைப்பு
கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள வார இதழில் பிரசுரமான செய்தி இது. சஜித், கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், மற்றும் பிரச்சாரங்களில் கூறப்படும் கருத்துக்கள் குறித்து இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ இலங்கையில் விசாரணை செய்வதாக இந்தச் செய்தியில் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து குழு ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்திருப்பதாக வடமாகாண வட்டாரங்களை மேற்கோள் காண்பித்து அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களும் இந்தியா தொடர்பாக என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்வதே இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவின் முக்கிய நோக்கம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது்.

றோ அமைப்பிற்கு நேரடித் தொடர்பு காணப்படுகின்ற வடபகுதியிலுள்ள இரு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இந்தக் குழு சந்தித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்காக இந்திய உளவுப் பிரிவான றோ அமைப்பு பெரிதும் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கா இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் றோ குழுவினர் பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து அவர்கள் ஆற்றுகின்ற உரைகளை வீடியோப் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தோ்தலில் இரு பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் விடயத்தில் அமெரிக்க, இந்திய அரசுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக ஏலவே செய்திகள், செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.