இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு- தமிழரசுக் கட்சி தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளோடும் கலந்துரையாட முடிவு
பதிப்பு: 2019 நவ. 03 17:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 05 04:12
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்குத் தமது பூரணமான ஆதரவை வழங்குவதற்குத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவு, வவுனியாவில் உள்ள கட்சியின் கிளை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
 
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

பதின்மூன்று அம்சக் கோரிக்கை அடங்கிய ஆவணம் கைவிடப்பட்ட நிலையில் ஐந்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடாமல் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?

சுமார் ஏழு மணி நேரமாக இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்டது. அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு தொடர்பாக தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஐந்து கட்சிகளின் கூட்டத்தில் பதின்மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆவணமாக வெளியிடப்பட்டிருந்தன.

இந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு என்றும் அப்போது கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆவணத்தை ஏற்க முடியதென சிங்கள அரசியல் கட்சிகளின் இரண்டு பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்கு முன்னர், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.