கிழக்கு மாகாணம் காத்தான்குடியில்

முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்- மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் போராட்டம்

தாக்குதல், கொலை அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் கோசம்
பதிப்பு: 2019 நவ. 04 22:00
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 05 04:07
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#journalist
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் பலர் கலந்துகொண்டு எதிர்ப்பு வெளியிட்டனர். ஊடகவியலாளர்கள் அனைவரும் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர் கிஸ்புல்லாவின் அலுவலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர் முகமட் சஜி தாக்கப்பட்டிருந்தார்.
 
அத்துடன் கொழும்பிலுள்ள அரச ஊடகம் ஒன்றின் செய்தி ஆசிரியர் முகமட் இர்பானுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவங்களைக் கண்டித்தே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியது.

குறித்த ஜனாதிபதி வேட்பாளரைக் கண்டிக்கும் சுலோக அட்டைகள், பதாதைகளைக் கைகளில் ஏந்தியவாறு போராட்டம் நடைபெற்றது. இலங்கைப் பொலிஸார் சிலரும் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் முஸ்லிம் ஊகவியலாளர்கள் பலரும் பங்குபற்றியதுடன் குறித்த வேட்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கோசம் எழுப்பினர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் எம்எல்ஏம்.கிஸ்புல்லா போட்டியிடுகின்றார். ஆனால் அனேகமான முஸ்லிம் அரசியல் கட்சிகள். முஸ்லிம் அரசியல்வாதிகள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர்.