பதின்மூன்று அம்சக் கோரிக்கை அடங்கிய ஆவணத்தையும் மாணவர்களையும்

ஏமாற்றிய தமிழரசுக் கட்சி- சிவாஜிலிங்கம் கண்டனம்

இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்க முடியாதென்றும் கூறுகிறார்
பதிப்பு: 2019 நவ. 04 22:50
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: நவ. 08 03:52
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
பதின்மூன்று அம்சக் கோரிக்கையை கைவிட்டுத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்தமை தமிழ் மக்களுக்கும் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ம.க.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீண்ட விளக்கமளித்த சிவாஜிலிங்கம், பிரதான சிங்களக் கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்தார். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொலை செய்த கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்றார்.
 
ரணில் விக்கிரமசிங்க பக்கம் உள்ள சரத் பொன்சேக போரைத் தானே நடத்தியதாகக் கூறுகின்றார். அதாவது இந்தப் படுகொலைகளைச் செய்தது தானே என்று சரத் பொன்சேகா கூறுகிறார் என்றும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து இரண்டாகப் பிரித்து வைத்தவர்கள்தான் ஜே.வி.பி. தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்த ஜே.வி.பி முழு ஆதரவும் வழங்கியதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

ஆறு கட்சிகள் இணைந்து கூட்டு முயற்சி எடுத்தபோது ஒரு கட்சி தவிர்ந்து ஏனைய ஐந்து கட்சிகள் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தனர். அதில் பதின்மூன்று அம்சங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சுமந்திரன் துரோகமான செயற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த கட்சிகள் ஏற்கனவே கூடியபோது தமிழரசுக் கட்சி இவ்வாறு செயற்படுவார்கள் என்பதை அன்றே அறிந்திருந்தோம். இந்த நிலையில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன விடயத்தை கண்டு அவர்களிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கியிருந்தது என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இரண்டு தடவை அன்னம் கவிழ்ந்துவிட்டது. முதல் தடவை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதில் பயன் கிடைக்கவில்லை. இரண்டாவது தடவையாக மைத்திரிபால சிறிசேனவுக்காக அன்னத்திற்கு வாக்களித்தோம். ஆனால் இரு தடவையும் தமிழ் மக்களிற்கு எவையும் கிடைக்கவில்லை.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர் குற்றம் இளைத்தவர்களை பாதுகாப்பதாகவே கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா தான்தான் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கின்றார். ஆகவே யார் கொலைகாரன். இந்த சரத் பொன்சேகாவும் கொலைகாரனே. இவர்களைப் போன்றவர்களை பாதுகாப்பதற்கா தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது?

காலத்திற்கு காலம் நாம் ஆட்சி மாற்றத்தை செய்யவில்லை. ஆட்களைதான் மாற்றியுள்ளோம். நாம் ஆட்சியை மாற்றியதாக எண்ணிக்கொண்டு இதுவரை இருந்துள்ளோம். உண்மை அதுவல்ல. சந்திரிக்கா அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச, அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன அடுத்தது யாராகவோ இருக்கலாம்.

அதனால் தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்காது. அன்னம் பாலுடன் கலக்கப்பட்ட தண்ணீரிலிருந்து பாலை மட்டும் குடித்துவிட்டு தண்ணீராக தமிழர்களை கைவிட்டுவிடும் என்பதே உண்மை எனவும் சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.