இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

மூன்று கட்டப் போரை நடத்தியது நானே- சந்திரிகா கூறுகிறார்

சஜித் பிரேமதாச வெற்றிபெற வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்
பதிப்பு: 2019 நவ. 06 10:15
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 08 03:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
சஜித் பிரேமதாச சிறந்ததொரு வேட்பாளர் அவருக்கு வாக்களித்துப் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மக்களின் பிரதான கடமை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் மாநாடு நேற்றுச் செய்வாய்க்கிழமை கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது. அங்கு தலைமையுரையாற்றிய சந்திரிகா ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இணைந்துள்ள உறுப்பினர்கள் அனைவருமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்தான். அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
 
சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதி. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய முடிவு செய்துள்ளதாக சந்திரிகா கூறினார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறிய சந்திரிகா, நேற்று இடம்பெற்ற மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் பலர் சமூகமளிக்கவிருந்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச தடுத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தினார்.

அமைச்சர்களான ராஜித சேனரட்ன, அர்சுனா ரணதுங்க ஆகியோர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோருக்கு ஈடாக ஈழத் தமிழ் மக்களின் முதல் மூன்று கட்டப் போரை வெற்றிகரமாக நடத்தி முடித்தது தானே என்றும் சந்திரிகா கூறினார்.

இலங்கையின் இறைமை தன்னாதிக்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு புதிய ஜனாதிபதிக்கு உண்டு. அதேவேளை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் சந்திரிக்கா கூறினார்.