ஈழத் தமிழ் இதழியல்துறையின்

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் காலமானார்- ஊடகவியலாளர்கள் உட்படப் பலரும் அஞ்சலி

அவருடைய விருப்பத்தின்படியே புகழுடல் யாழ் மருத்துவ பீடத்திற்குக் கையளிக்கப்படும்
பதிப்பு: 2019 நவ. 06 10:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 08 03:40
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#journalist
ஈழத் தமிழ் இதழியல் துறையின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்கண்ணு பெருமாள் எண்பத்து ஆறாவது வயதில் நேற்றுச் செய்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். இலங்கைத் தீவின் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த பெருமாள், கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகைத்துறையை ஆரம்பித்தார். மாணவராக இருந்தபோதே இதழியல்த் துறையில் ஆர்வம் கொண்ட பெருமாள், மாணவப் பருவத்திலேயே பல ஆக்கங்களை வீரகேசரியில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் 1961 ஆம் ஆண்டு முதல் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
 
போர்க்காலத்தில் இவருடைய பணி முக்கியமானதாக இருந்தது. அந்தக் காலப் பகுதியிலேயே ஈழநாடு வாரமஞ்சரியின் ஆசிரியராகவும் பெருமாள் பதவி வகித்திருந்தார்.

பெருமாள்
ஈழத் தமிழ் இதழியல் துறையின் முன்னோடிகளில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் சின்னக்கண்ணு பெருமாள்.

பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் ஆலோசகராகவும் பெருமாள் பணிபுரிந்தார். சுமார் ஐம்பத்து ஐந்து வருடங்கள் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய பெருமாள், 2017 ஆண்டு ஓய்வு பெற்ற பின்னரும் கூட ஊடகத்துறை மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வந்தார்.

குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறி மாணவர்களுக்குத் தன்னுடைய அனுபவங்களை இவர் பகிர்ந்து வந்தார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அவரைச் சந்திப்பது வழமையாகும்.

இதேவேளை, பெருமாளின் விருப்பப்படி அவரது புகழுடல் சமயச் சடங்குகளின் பின்னர் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் ஆய்வுக்காக உறவினர்களினால் கையளிக்கப்படவுள்ளது.

தற்போது ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் அவருடைய இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.