வடக்குக் கிழக்குத் தாயகத்திலும் கொழும்பிலும் காணாமல் ஆக்கப்பட்ட

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி துண்டுப் பிரசுரம்

நீதி கோரும் விழிப்புணர்வுப் பயணத்தை வடமாகாணம் முழுவதும் ஆரம்பித்தனர் தமிழ் ஊடகவியலாளர்கள்
பதிப்பு: 2019 நவ. 06 18:43
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: நவ. 08 03:35
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#tamil
#journalist
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி தமிழ் ஊடகவியலாளர்களினால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இன்று புதன்கிழமை கிளிநொச்சி, வவுனியா. மன்னார் ஆகிய பிரதேசங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போராட்டம் இடம்பெற்றது. யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து இன்று வரை நீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தினர். கடந்த முப்பது வருடங்களாக தமிழ் ஊடகத்துறை பல்வேறு அச்சுறுத்தல்களையும் நெருக்குவாரங்களையும் எதிர்கொண்டு வருகின்றது.
 

ஆனால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் பலருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் சென்ற சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள், பொலிஸாரின் விசாரணைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள், இலங்கைப் பொலிஸாரின் விசாரணைகள் எதுவுமே நடத்தப்படுவதில்லை

தமிழ் ஊடகத்துறையின் அச்சமான நிலைமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஊடகவியலாளர்கள், பதவிக்கு வரும் சிங்கள ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்றும் குற்றம் சுமத்தினர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேசன், ஊடகவியலாளர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த செல்வகுமார், வடமாகாணம் முழுவதும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருவதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களிற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் நாற்பத்து மூன்றுபேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் எதுவுமே நடத்தப்படவில்லை என்று சபேசன் தெரிவித்தார்.

இதேவேளை, போர்க்காலத்தில் சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் கொல்லப்பட்டனர், தாக்கப்பட்டனர், கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களுக்காகவும் நீதி கோரி தமிழ் ஊடகவியலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள், பொலிஸாரின் விசாரணைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்று வருகின்றன. எனினும் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள், இலங்கைப் பொலிஸாரின் விசாரணைகள் எதுவுமே நடத்தப்படுவதில்லை.

பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனவும் அந்தப் பாதிப்புகள் ஊடகத்துறைக்கான அச்சுறுத்தல்கள் அல்ல என்றும் சிங்கள அரசியல்வாதிகளும் தென்பகுதியில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் கருதுகின்றனர்.

சிங்கள ஊடகவியலாளர்களுக்கான பாதிப்புகளை மாத்திரமே ஊடகத்துறைக்கான அச்சுறுத்தல்களாக சிங்கள அரசியல்வாதிகள் கருதுகின்றனர். இது மிகவும் மோசமான இன ரீதியான அணுகுமுறை என்று தமிழ் ஊடகவியலாளர்கள் ஏற்கனவே சர்வதேச அமைப்புகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனாலும் நீதி கிடைக்கவில்லை.

இலங்கையில் ஊடகத்துறை இரண்டாகப் பிளவுபட்டுள்ளதையே இந்த அணுகுமுறை காண்பிப்பதாக அவதானிகளும் தெரிவித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும் தமிழ் ஊடகத்துறையே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதென பிரபல சிங்கள ஊடகவியலாளர் ஞானசிறி கொத்திக்கொட கொழும்பு இதழியல் கல்லுாரியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கூறியிருந்தார்.

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம். ஊடகவியலாளர் சம்மேளனம் போன்ற சில சிங்கள ஊடக அமைப்புகள் மாத்திரமே தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் குரல் கொடுத்து வருகின்றன.

நல்லாட்சி என்று தம்மைத்தாமே கூறிக் கொண்டு 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் நேரடியான, மறைமுகமான கண்காணிப்புக்கு உட்பட்டு வருகின்றனர்

இதேவேளை, நல்லாட்சி என்று தம்மைத்தாமே கூறிக் கொண்டு 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் நேரடியான, மறைமுகமான கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தனர்.

கொழும்பில் உள்ள இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுமிருந்தனர். இந்த நிலையில் நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எவரும் ஊடக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது குறித்த உறுதிமொழிகளை ஏற்புடைய முறையில் வழங்கவில்லை.

அத்துடன் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவது பற்றி எதுவுமே கூறவில்லை. வெறுமனே பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் ஊடகத்துறையையும் தமிழ் மக்களையும் ஏமாற்றவே முற்படுவதாக ஊடகத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.