இலங்கை ஒ்ற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

ஒற்றுமையை வெளிப்படுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம்- காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம்

சிங்களக் கட்சிகளின் பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியாதென்கிறார் லீலாதேவி
பதிப்பு: 2019 நவ. 07 12:37
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: நவ. 08 03:27
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க முடியாது. ஒருவர் புடையன் பாம்பு என்றால் மற்றையவர் நாகபாம்பு என வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமது சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது. எனினும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து ஒற்றுமைப் பலத்தைக் காண்பிக்க முடியும் என்றும் லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.
 
சிவாஜிலிங்கம் நல்ல மனிதர். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர். தமிழ்த் தேசியப் பற்றாளர் எனவும் அவர் கூறினார்.

இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நடத்திய போராட்டங்களின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் அமைதியாகவே இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சுயலாபங்களுக்காகவே செயற்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தமது சுயநல நோக்கில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது. இது சுயநலமான அறிவிப்பு என்றார் அவர்.

தமது சங்கம் தெரிவிக்கும் சில கருத்துக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சுயநல அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றது. அதனைத் தமது சங்கம் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் கால அவகாசம் வழங்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தமை துரோகமான செயற்பாடாகும். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம் திறப்பதற்கும், அதன் கிளை அலுவலகத்தைத் தாயகப் பிரதேசங்களில் திறப்பதற்கு அனுமதித்தமையும் தவறானதென்று லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்று ஜெனீவா கூட்டத் தொடரில் வெளி்நாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆங்கில மொழியில் உரையாற்றும் போது தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.