கிழக்கு மாகாணம் அம்பாறை

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணியை நிறுத்திய இராணுவத்தினர்

ஊடகவியலாளர்களின் அடையாள அட்டைகளும் படம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிப்பு
பதிப்பு: 2019 நவ. 08 14:17
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 09 03:33
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#east
#amparai
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இன்று வெள்ளிக்கிழமை காலை சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. ஆனால் இங்கு வந்த இலங்கை இராணுவத்தினர் சிரமதானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர். நிறுத்தவில்லையானால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்ததாக சிரமதானப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். முன்னாள் போராளிகள், மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிரதேச மக்களும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
 
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத் துப்பரவுப் பணியின்போதே இராணுவத்தினர் தடைவிதித்தனர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு ,மட்டக்களப்பு, மாவடி முன்மாரி, தாண்டியடி, வாகரை கண்டலடி திருமலை ஆலங்குளம், செம்மலை உள்ளிட்ட ஏழு மாவீரர் துயிலும் இல்லங்களும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 27 ஆம் நாள் மாவீரர்களை நினைவுகூருவதற்காக இந்த முன்னேற்பாடுகள் இந்த வருடமும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க இருப்பதனால், இன்று சிரமதானப் பணிகள் இடம்பெற்றன.

ஆனால் இலங்கை இராணும் அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தியதாக அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானக் குழுவின் தலைவரான குட்டிமணி மாஸ்டர் என்று அழைக்கப்படும் நாகமணி கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

சிரமதானப் பணியில் ஈடுபடும் அனைவரையும் படம் எடுக்க வேண்டுமெனவும் சுய விபரத்தை வழங்குமாறும் இராணுவத்தினர் வலியுறுத்தினர். ஆனால் படம் எடுப்பதற்கும் சுய விபரங்களை வழங்கவும் சிரமதானப் பணியில் ஈடுபட்ட மக்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

எனினும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களின் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்ததுடன் அவர்களின் அடையாள அட்டைகளையும் இராணுவத்தினர் படம் எடுத்ததாக அவர் கூறினார்.