மைத்திரியால் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்த இலங்கைக் காலால் படையின் பணிப்பாளர் துமிந்த கெப்பிட்டிவலன்ன

நீதிமன்றங்களில் முன்னிலையாக குருபரனுக்குத் தடை- சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு

யாழ் பல்கலைக்கழகத் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உத்தரவு
பதிப்பு: 2019 நவ. 10 22:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 29 03:29
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#jaffnauniversity
மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்குச் சார்பாக இலங்கை நீதிமன்றங்களில் வாதிட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு கொழும்பில் உள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இது குறித்துக் கருத்து வெளியிட குருபரன் மறுத்துள்ளார். இந்தத் தடையுத்தரவு குறித்த கடிதம் கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தகுதி வாய்ந்த அதிகாரி சென்ற ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதியே பேராசிரியர் க.கந்தசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும் யாழ் பல்கலைக்கழகப் பேரவையின் கூட்டத்திலேயே அது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுமென பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் இலங்கைப் பல்கலைக்கழக ஸ்தாபன விதிக் கோவை எட்டாம் ஆம் பிரிவின் கீழ் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளதால் அது குறித்து யாழ் பல்கலைக்கழகப் பேரவை ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் அனுமதியோடு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், பொதுநலம் சார்ந்த வழக்குகளில் 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் முன்னிலையாகி வருகின்றார்.

இலங்கை இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் பன்னிரென்டு பேர் தொடர்பாக 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார். 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலன்ன தலைமையிலான படையினர் கைது செய்த 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனாலும் மூன்று மனுக்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது. அந்த மூன்று பேரின் ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவாதியாக இளைஞர்களை கைது செய்தபோது யாழ் நாவற்குழி முகாமின் அதிகாரியாகவும் தற்போது இலங்கை இராணுவத்தின் காலாற்படையணியின் பணிப்பாளராகவும் செயற்படும் துமிந்த கெப்பிட்டிவெலான சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் பிரதிவாதியாக இலங்கை இராணுவத் தளபதி மற்றும் மூன்றாம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில் சட்ட மா அதிபர் திணைக்களம் முன்வைத்த விண்ணப்பத்தையடுத்து முதலாவது பிரதிவாதி துமிந்த கெப்பிட்டிவலன்ன சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

இந்த மனுக்கள் தொடர்பான ஆரம்ப விசாரணை சுமார் இரண்டு வருடங்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் கடந்த மே பத்தாம் திகதி இடைக்காலக் கட்டளையிடப்பட்டிருந்தது.

மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுத்து மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி யாழ் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு பொறுப்பு பாரப்படுத்தப்பட்டிருந்தது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான விசாரணை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பான மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் முன்னிலையாகியிருந்தார்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேயத்திய குணசேகர முன்னிலையானார். மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்து மன்றிலிருந்து சட்டத்தரணி குருபரன் வெளியேறிய போது அவரை, இலங்கை இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் தொலைபேசியில் காணொலிப் பதிவு செய்திருந்தார்.

அந்த இராணுவப் புலனாய்வாளர் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகரவின் வாகனத்தில் ஏறியிருந்து ஒளிப்படம் எடுத்ததையும் அதில் பயணித்தமையையும் சட்டத்தரணி குருபரன் கண்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக சாவகச்சேரி நீதிவானின் கவனத்துக்கும் கொண்டு வந்த சட்டத்தரணி குருபரன், சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுக்கு கடிதம் ஊடாகவும் முறையிட்டிருந்தார்.

தங்களால் முன்வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சட்ட மா அதிபரால் சட்டத்தரணி குருபரனுக்குப் பதிலளிக்கப்பட்டும் இருந்தது.

இந்த நிலையிலேயே கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், விரிவுரையாளராகவுள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி உண்டா? அவர் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகின்றார் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழகத் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமியிடமும் விளக்கம் கோரப்பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழகத் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமியும் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். குறிப்பாக நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கான அனுமதி பல்கலைக்கழகப் பேரவையால் வழங்கப்பட்டிருந்தது என்பதை அவர் தனது பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் இவருடைய கடிதமும் இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட கடிதமும் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் முன்வைக்கப்பட்டிருந்தன.

கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்வது என்றும் அவர் பிரசித்த நொத்தாரிசுப் பணியை முன்னெடுக்க அனுமதியளிப்பது எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டே யாழ் பல்கலைக்கழகத் தகுதி வாய்ந்த அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

துமிந்த கெப்பிட்டிவலன்ன இலங்கை இராணுவத்தின் காலாற்படையணியின் பணிப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஆண்டு மே மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.