இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

பிரதான வேட்பாளர்களிடையே கடும்போட்டி- முடிவுகள் வெளிவருவதிலும் தாமதம் ஏற்படலாம்- ஆணைக்குழு தகவல்

பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் வருகை- மூவாயிரத்து 627 முறைப்பாடுகள்
பதிப்பு: 2019 நவ. 12 16:10
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 13 09:54
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#SajithPremadasa
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனாலும் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளின் இரு வேட்பாளர்களுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவுகின்றது. ஜே.வி.பி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்காவுக்கு அதிகளவு வாக்குகள் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அந்த வாக்குகள் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்குரிய வாக்குகளில் தாக்கத்தைச் செலுத்தலாமெனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, முப்பத்து ஐந்து வேட்பாளர்களில் குறைந்தது பன்னிரண்டு வேட்பாளர்கள் பிரதான வேட்பாளர்களினால் திட்டமிடப்பட்டுக் களமிறக்கப்பட்ட போலியான வேட்பாளர்கள் என்று இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
 
இம்முறை முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குகளை எண்ணும் நேரம் மேலும் அதிகரிக்கலாமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளர்.

பிரதான வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டு அவர்களுக்குரிய வாக்குகளின் விகிதாசாரம் போதியதாக இல்லையென்றால் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் இதனால் தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை பதினெட்டாம் திகதி நண்பகல் அளவிலேயே வெளிவரும் எனவும் மகிந்த தேசப்பிரிய கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதேவேளை தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை முப்படையினரும் பிரதான நகரங்களில் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறிய மகிந்த தேசப்பிரிய முறைப்பாடுகளை உடனுக்குடன் பதிவு செய்வதற்கு விசேட கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். உள்ளூர் கண்காணிப்பாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக இதுவரை மூவாயிரத்து 627 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வன்முறைகள் கூடுதலாக இடம்பெறலாம் எனக் கருதப்படும் பிரதேசங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன.