இலங்கை ஒற்றையாட்சி ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்கள் உ்ள்ள நிலையில்

கோட்டாபயவின் இலங்கைக் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி மீண்டும் மனுத் தாக்கல்

உயர் நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன
பதிப்பு: 2019 நவ. 13 21:59
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 14 02:41
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் குடியுரிமையை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, காமினி வியங்கொட ஆகியோரால் இந்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இரு நாட்கள் உள்ள நிலையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை தொடர்பாக கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தொடர்பாக மூன்று நாட்கள் தொடர்ந்து விசாரணை இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் எந்தவொரு ஆவணமும் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு சமர்பிக்கப்படவில்லை என்றும், 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சரவை ஒன்று அமைக்கப்பட்டிராத நிலையில் குடியுரிமை வழங்கப்பட்ட விவகாரம் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் நீதிமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற அதிகாரங்களுக்கு அமைய அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்சவுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கியமை அரசியலமைப்புக்கு முரணான விடயமல்ல என்ற தீர்ப்பைக் கடந்த ஒக்ரோபர் மாதம் நான்காம் ஆம் திகதி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இன்று புதன்கிழமை குறித்த இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, ஐக்கிய அமெரிக்காவினால் குடியுரிமை இரத்து செய்தவர்களின் காலாண்டுப் பட்டியல் மே மாதத்திலிருந்து இரண்டு முறை வெளியிட்ட போதிலும், அதில் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இருக்கவில்லை என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதால் தென்னிலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருந்த போதிலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணி அலிசப்ரி, அவரது அமெரிக்கக் குடியுரிமை இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஆவணங்களை விசேட ஊடக சந்திப்பை நடத்தி வெளியிட்டிருந்தார்.

இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருக்கின்ற நிலையில், ஸ்ரீலங்காப் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபயவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.