இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில்

மலையக மக்களைச் சிந்தித்து வாக்களிக்குமாறு மூன்று அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை

கௌரவமான வாழ்வைக் கொடுக்க மறுக்கும் வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டுமெனவும் பரிந்துரை
பதிப்பு: 2019 நவ. 13 23:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 14 23:23
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் மலையகத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காத, மலையக தொழிலாளர் வர்க்கத்திற்கு கௌரவ வாழ்வை பெற்றுக் கொடுக்க மறுத்த சகல வேட்பாளர்களையும் நிராகரிக்குமாறு கோருவதாக புதிய பண்பாட்டு அமைப்பு, மலையக சமூக ஆய்வு மையம், இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. தேசமாய் எழுவோம்- மலையகத் தமிழர் நாம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதித் தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பது தொடர்பாக இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதேவேளை, மலையகத் தமிழ் மக்களு்க்குக் கௌரவமான வாழ்வைக் கொடுக்கக் கூடிய வேட்பாளரை அறிந்து நன்கு சி்ந்தித்து வாக்களிக்குமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.


 
மலையகத் தமிழ் அரசியல் கட்சிகள் மீது மலையகத் தமிழ் மக்கள் அதிருப்பதியடைந்துள்ளனர். எனவே யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக உரிய முறையில் சிந்தித்துச் செயற்பட வேண்டுமென்ற நோக்கில் குறித்த மூன்று சிவில் அமைப்புகளும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமை காரணமாக எழுந்த தோட்ட தொழிலாளர் வெளியேற்றம் சுமார் 350,000 திலிருந்து 140,000 மாக வீழ்ச்சியடைந்நதது. மலையகத் தமிழரின் பண்பாடு, மரபுரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன

அறிக்கையின் முழு விபரம் வருமாறு-

மலையகத் தமிழர்கள் இலங்கையின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் பொருளாதார சமூக அசைவியகத்திலும் நிர்ணயகரமான சக்தியாவர். 1948- 1988 காலப்பகுதியில் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் மறுக்கப்பட்ட நாடற்ற மக்கள் கூட்;டமாக ஆக்கப்பட்ட போதும், 1964- 1985 வரை நாடுகடத்தப்படும் மக்களாக இலங்கை இந்திய அடிமை சாசனங்களால் விரட்டியடிக்கப்பட்ட போதும், ஈழப்போரில் காத்திரமான பங்களிப்பு செய்தும் அநியாயமான பேரிழப்பிற்கு முகங்கொடுத்த போதும், சிங்கள பௌத்த இனவாத தாக்குதல்களால் தொடரலையாக அழிக்கப்பட்டு, விரட்டப்பட்டு சனத்தொகையில் 13 சதவீதமாக இரண்டாவது தேசிய இனமாகவிருந்து 4.2 சதவீதமாக நான்காவது தேசிய இனமாக திட்டமிட்டு சிதைக்கப்பட்ட போதும், 1972- 1977 பட்டினி கொடுஞ்சாவில் அழிந்த போதும், 1972, 1974 ஆம் ஆண்டுகளின் காணி குடியேற்ற சட்டங்களாலும், 1948- 2019 க்கிடையிலான ஆக்கிரமிப்பு அபிவிருத்தி காப்பரேட் பாசிசத்தில் நில அபகரிப்புக்குள்ளாகி தம் வாழ்விடங்களை இழந்த போதும், இந்நாட்டின் பொருளாதாரத்தின் தீர்க்கமிகு பங்காளிகளாக திகழ்ந்தவர்கள் மலையகத் தமிழர்களாவர்.

கடந்த 80 வருட தேர்தல்களில் (14 பாராளுமன்ற தேர்தல்களிலும்இ 07 சனாதிபதி தேர்தல்களிலும்) வெறும் வாக்களிப்புக்கான இயந்திர கருவிகளாக பயன்படுத்தப்பட்டவர்கள் மலையகத் தமிழர்கள். மலையக தொழிற்சங்கங்களின் அரசியல் செயற்பாடுகள் மலையக மக்கள் விடயத்தில் அதிகமான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. கடந்த 1977– 2019 வரையான 42 ஆண்டுகளில் எமது தொழிற்சங்க இயக்கங்கள் பிழைப்பிற்காக தொழிலாளர் நலன் அரசியலை விட்டு கொடுத்து வந்துள்ளன. அதன் விளைவாக நூற்றாண்டுகளாக தோட்ட தொழிலாளர் போராடிப் பெற்ற பல தொழில்கள் உரிமைகள், நலன்கள், சலுகைகள் இழக்கப்பட்டுள்ளன.

அரசியல் நலன்களுக்காக அரச தோட்டங்களை மீண்டும் தனியார் மயப்படுத்தப்பட்ட 1992- 2019 வரையான இடைப்பட்ட 27 வருடங்களில் இலங்கையின் பெருந்தோட்டத்துறை பாரிய அழிவை நோக்கி சென்றுள்ளது. 1972 ஆம் ஆண்டில் காணி சீர் திருத்தங்களால் அழிக்கப்பட்ட தோட்டங்கள் ஓர் தேசிய இனத்தின் இருப்பை அழித்து பெருந்தேசிய நலன்களுக்கு தீனி போட்டன. கண்டி, மாத்தளை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மொனறாகலை, கம்பளை, கொழும்பு, காலி, மாத்தறை மாவட்ட தோட்டங்கள் மூடப்பட்டதோடு தொழிலாளர்கள் பெருந்திரளானோர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு அபிவிருத்தி திட்டங்களால் காசல்றி, மௌசாக்கலை, லக்சபான 1, விமலசுரேந்திர, லக்சபான 2, கெம்பியன், விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகலை, பொல்கொல்லை, மேல் கொத்மலை நீர்தேக்கங்கள் பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழ் தொழிலாளர்களை நிர்க்கதி நிலைக்குள்ளாகி சிதைத்து சின்னாபின்னப்படுத்தியது.

இரு பிரதான கட்சிகளினாலும் 1956, 1977, 1979, 1981, 1983, 1984, 1988, 2000, 2004 என தொடரலையான இன வெறித் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு மலையகத் தமிழர்கள் பேரழிவுக்குள்ளாகினார்கள். இதற்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு இரு பிரதான கட்சிகளுக்கும் உள்ளது.

கருத்தடை ஒரு திட்டமிடப்பட்ட இன அழிப்புக் கருவியாக பயன்படுத்தப்பட்டு மலையகத்தில் கருவறைப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாட்டின் நிரந்தரமான பேண்தகு பொருளாதார துறையான பெருந்தோட்டத் துறையை தாங்கி பிடித்து அடிமைப்பட்ட நிலையில் வாழும் மலையகத் தமிழர்களின் கல்வி, சுகாதாரம், போசாக்கு, காணி மற்றும் வீட்டு உரிமை என்பனவற்றில் திட்டமிடப்பட்ட புறக்கணிப்புக்கள் நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்கின்றன.

இரு பிரதான கட்சிகளினாலும் 1956, 1977, 1979, 1981, 1983, 1984, 1988, 2000, 2004 என தொடரலையான இன வெறித் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு மலையகத் தமிழர்கள் பேரழிவுக்குள்ளாகினார்கள். இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இரு பிரதான கட்சிகளுக்கும் உள்ளது

உயர் கல்வி, தொழிற்கல்வி, வேலைவாய்ப்புக்கள், புலமை பரிசில் திட்டங்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்புதுறை, விஞ்ஞான- தொழிநுட்ப வாய்ப்புக்கள், பாதுகாப்புதுறை என்பனவற்றில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் விளிம்புநிலை மக்களாக மலையகத் தமிழர்கள் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போலி அபிவிருத்தி திட்டங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நீல புத்தகம், 1994 ஆம் ஆண்டின் தோட்ட வீடமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சின் 45 ஆண்டு திட்டம், மலையக புதிய கிராமங்கள் அமைச்சின் 5 ஆண்டு ;திட்டம் என்பன போலி இலக்கிடப்பட்ட, தர்க்க ரீதியற்ற, வினைபயனற்ற மலையக அரசியல் தரகர்களுக்கு கப்பமளிக்கும் திட்டங்களாகவுள்ளன.

மலையகப் பாட்டாளிகளின் பெயரில் மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களில், அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிடப்பட்ட பாரிய கொடைகள் (GTZ, GIZ) ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக உதவி என்பவற்றிலிருந்து பெறப்பட்ட நிதியுதவிகள் ஊழல் மோசடிக்குள்ளாகியுள்ளன.

தோட்டபகுதிகளில் போடப்பட்ட கொங்றீட் வீதிகள் திருவிழாவுக்கு திருவிழா புதுப்பிக்கப்படும் அவலமும், 510 தோட்ட சுகாதார நிலையங்கள் பராமரிப்பற்ற நிலையிலும், 125 தோட்ட அஞ்சல் நிலையங்கள் கைவிடப்பட்ட நிலையிலும், தோட்டப்புறங்களில் 90% சுத்திகரிக்கப்படாத நீர் விநியோக முறைமையும், மலசல கூடங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைக்காத நிலைமையும் இன்றும் தொடர்கின்றது.

கல்வி வணிகமயமாக்கப்பட்டு இலவச கல்வி கேள்விநிலைக்குட்பட்டு உள்ளது. சர்வதேச பாடசாலைகள், தனியார் பல்கலைகழகங்களில் மலையக அரசியல் தரகர்கள் கோடிகணக்கில் பணம் பறிக்கும் மோசடிகாரர்களின் மையங்களாக மாறியுள்ளன.

தோட்ட புற அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ள போதும் விசாரணைகளோ, சட்ட நடவடிக்கைகளோ இடம்பெறாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆளும் அரசாங்கங்கள் மலையக தொழிற்சங்க முதலாளிகளுக்கும், வாக்குதரகர்களுக்கும் வழங்கும் கப்பமாகவே அமைச்சுப்பதவிகள் உள்ளன.

வீடமைப்புத் திட்டங்களைக் காட்டி 27 வருடங்களில் 06 தேர்தல்களில் மலையகத் தமிழ்த் தொழிலாளரின் வாக்குகள் திட்டமிடப்பட்ட முறையில் கொள்ளையிடப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமையான கூலி உயர்வுப் பேரத்தை எரியும் நெருப்பாக மாற்றி வாக்குறுதிகள் வழங்கி நம்பமுடியாத மிகக் கொடுமையிலும், நோய்தனிலும், தற்கொலை மரணங்களிலும் தங்கியுள்ளன.

சிசு மரணம், தாய் மரணம், தற்கொலை மரணம், குள்ளமாதல் வீதம் 44%, பாடசாலை இடைவிலகல், வேலையின்மை, போசாக்கின்மை 44%, வறுமை 44% (உத்தியோக பற்றற்ற) உயர் மது பாவனை, உயர்ந்தபட்ச போதைப்பொருள் பாவனை என அனைத்து துறைகளிலும் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மலையகத் தமிழர்கள் வரலாறு-

முழுவதுமாக அடுப்பிலிருந்து தாய்ச்சியிலும், தாய்ச்சியிலிருந்து நெருப்புமாக எரிநெருப்பில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஒருவர் பின் ஒருவர் ஆட்சி செய்த போதிலும் 1960 களின் பின்னர் பாரம்பரிய இடதுசாரி கட்சிகளான லங்கா சமசமாச கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்பனவும் பெருந்தேசியவாத தரகு முதலாளித்துவ சிந்தனை போக்குகளை பிரதிபலிக்கின்றன.

வீடமைப்புத் திட்டங்களைக் காட்டி 27 வருடங்களில் ஆறு தேர்தல்களில் மலையகத் தமிழ்த் தொழிலாளரின் வாக்குகள் திட்டமிடப்பட்ட முறையில் கொள்ளையிடப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமையான கூலி உயர்வுப் பேரத்தை எரியும் நெருப்பாக மாற்றி வாக்குறுதிகள் வழங்கி நம்பமுடியாத மிகக் கொடுமையிலும், நோய்தனிலும், தற்கொலை மரணங்களிலும் தங்கியுள்ளன

பிரசாவுரிமை, வாக்குரிமை, மொழியுரிமை பறிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் மலையக மண்ணின் பாட்டாளி வர்க்கமான மலையகத் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் மலையகத் தமிழ் தேசிய இனத்தை பாரிய அழிவிற்கும், சிதைவிற்கும், அவமதிப்பிற்கும் உள்ளாகியுள்ளனர். இந்நிலையை பின்வரும் அட்டவணை சிறப்பாக சித்தரிக்கின்றது.

1931 ஆம் ஆண்டின் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம், 1948 ஆம் ஆண்டின் குடியுரிமை பறிப்பு சட்டம், 1949 ஆம் ஆண்டின் இந்திய- பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம், 1956 ஆம் ஆண்டின் அரச கரும மொழிகள் சட்டம், 1958 ஆம் ஆண்டின் பேரின வாத வன்முறை தாக்குதல்கள், 1964 ஆம் ஆண்டின் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம், 1971 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த சட்டம், 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பில் சோல்பரி யாப்பின் 29 ஆம் பிரிவை நீக்கிய ஏற்பாடு, 1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த திருத்த சட்டம், 1974 ஆம் ஆண்டின் சிறிமா - இந்திரா உடன்படிக்கை, 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பு, 1978 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள், 1979 ஆம்ஆண்டு வன்முறை தாக்குதல்கள், 1980 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள், 1981 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள், 1983 ஆம்ஆண்டு கறுப்பு ஜீலை இன வன்முறை தாக்குதல்கள், 1984 ஆம் ஆண்டு இரத்தினபுரி தமிழர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், 1986 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் இன வன்முறை தாக்குதல்கள் (தலவாக்கலை), 1994 ஆம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் உருவாக்கம், 1998 ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழா ஆண்டில் இன வன்முறை தாக்குதல்கள் (இரத்தினபுரி), 2000 ஆம் ஆண்டு பதுளை மாவட்ட பிந்துனுவௌ சிறை கைதிகள் படுகொலையும் மலையக தேசிய பேரெழுச்சியும், 2005 ஆம் ஆண்டு வறுமை ஓழிப்பு அமைச்சு உருவாக்கம், 2010 ஆம் ஆண்டு களுத்துறை தமிழர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், 2014 ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தில் அரசியல் குண்டர்களின் வன்முறை தாக்குதல்கள், 2015–2019 வரையான காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் இரத்தினபுரி பிட்டவின் தோட்ட தொழிலாளர்கள் மீதான பொலிஸ் வன்முறை தாக்குதல், நானுஓயா அரச பயங்கரவாத தாக்குதல், பொகவந்தலாவை ராணிகாடு தோட்ட தொழிலாளர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல மற்றும் அரச உயர்மட்ட தலைவர்களால் வழங்கப்பட்ட போலி வாக்குறுதிகள் நிர்மூலமாக்கப்பட்டு சமூக மயமாக்கப்பட்ட போதிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் இலங்கையின் பேரினவாத அரசியல் கட்சிகளிடத்திலும், பௌத்த சிங்கள மேலாதிக்க போக்குடைய அரசியல், நீதி, நிர்வாக கட்டமைப்புகளிலும் மலையகத் தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் கிட்டும் என்பது அபத்தமானதாகும்.

ஏனெனில்-

மலையக மக்கள் தொகையில் 2ஃ3 பங்கு சனத்தொகை சிதைக்கப்பட்டு பின்னர் குடியுரிமை வழங்கப்பட்டது.

எஞ்சிய மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

40 ஆண்டுகள் அவசர கால சட்டத்தால் நாடு தொடர்ச்சியாக ஆளப்பட்டு வந்துள்ளது.

கருத்தடை ஓர் இன அழிப்புக்கான கருவியாக மாற்றப்பட்டு மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான கருவறை படுகொலைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

தேர்தல்களில் போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு திட்டமிட்டு வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டன

1992ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமை காரணமாக எழுந்த தோட்ட தொழிலாளர் வெளியேற்றம் சுமார் 350,000 திலிருந்து 140,000 மாக வீழ்ச்சியடைந்தது. மலையகத் தமிழரின் பண்பாடு, மரபுரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன.

தோட்டத்துறையின் நெருக்கடிகளுக்கான நிர்வாக வெளியார் உற்பத்தி முறைமை (Out Grower Model) வருமான பங்கீட்டு முறை, விவசாய சமூகமாக மாற்றவுமான சதிராடு களத்தில் நாட்டின் தற்;போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனாதிபதி வேட்பாளர்களான கோத்தபாய ராஐபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோர் மலையக அரசியல் தொழிற்சங்க முதலாளிகள், பண்ணாட்டு நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், நிதி கூட்டாண்மைகள், கோப்பரேட் அரசுகள், காலணித்துவ முறை, பின் காலணித்துவ அறிதல் முறைகளில் மூழ்கியதன் மூலம் சுய புத்தி இழந்த புத்திசாலிகள் ஆகியோரின் வழிகாட்டல்களில் வழங்கியுள்ள ஆடம்பரமான வாக்குறுதிகள் பொய்மை நிறைந்தவை, அரசியல் பொருளாதார மதிப்பீடற்றவை என்பதை எவரும் உணர முடியும்.

எனவே, அடுத்த தேர்தலில் உடனடியாக மலையகத் தமிழ் தேசிய இனத்தை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காத, மலையக தொழிலாளர் வர்க்கத்திற்கு கௌரவ வாழ்வை பெற்றுகொடுக்க மறுத்த சகல வேட்பாளர்களையும் நிராகரிக்குமாறு கோருகின்றோம்.

மலையகத் தமிழர்களின் இன, வர்க்க நலன்கள், கல்வி, சுகாதாரம், போசாக்கு, கௌரவமிக்க வாழ்வு, வேலை வாய்ப்புக்களை வழங்க கூடியதும் தோட்டத்துறையை தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களிடம் ஒப்படைக்ககூடியதுமான சமத்துவ சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காக தம்மை அர்ப்பணிக்க கூடிய வேட்பாளரை தேர்ந்தெடுத்தல் அவசியம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, மலையகத் தமிழரனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் கோருகின்றோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.