இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணையாளரைப் பதவி விலகுமாறு கோரி

யாழ் செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்த தம்பிராசா கைது

யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்
பதிப்பு: 2019 நவ. 14 20:43
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 15 02:00
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டுமெனக் கோரி யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்த அரசியல் செயற்பாட்டாளர் மு.தம்பிராசா இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ம.க.சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த, தம்பிராசா இன்று வியாழக்கிழமை பிற்பகல் நான்கு முப்பதுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தைக் கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்ட போது, தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.
 
ஆனாலும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று மகிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் வருகை தந்த தேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸார், போராட்டத்தை நிறுத்துமாறு வற்புறுத்தினர். இதனால் பொலிஸாருடன் தம்பிராசா தர்க்கப்பட்டார்.

கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரங்களை தமிழ் மொழியில் வழங்குமாறு கோரினார். அப்படியில்லையேல் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் தம்பிராசா பொலிஸாரிடம் கூறினார்.

ஆனால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்தமையினால் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடியாதென்று பொலிஸார் அறிவுறுத்தினர். ஆனால் அதனைத் தம்பிராசா ஏற்கவில்லை. இதனால் நீண்டநேர வாக்குவாதத்தின் பின்னர் பொலிஸார் தம்பிராசாவை பலாத்காரமாகத் தூக்கிச் சென்றுள்ளனர்.

தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.