இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பு- அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

ரணில் விக்கிரமசிங்கவும் வெளிநாட்டுத் தூதுவர்களும் நிகழ்வில் பங்கேற்பு
பதிப்பு: 2019 நவ. 18 14:57
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 19 15:29
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#LKA
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஏழாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இன்று திங்கட்கிழமை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்குச் சென்ற கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பௌத்த சிங்கள மக்களின் புனித பூமியான வரலாற்று முக்கியத்துவம் உள்ள அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விகாரை வளாகத்தில் பதவிப் பிரமாணம் முற்பகல் 11.30க்கு நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பொரமுனக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
 
பதவி பிரமாண நிகழ்வுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ச புனித தலங்களான ருவன்வெலி மகாசாய மற்றும் ஸ்ரீமாகபோதி ஆகிய விகாரைகளுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

புத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விகாரையிலேயே அமைந்துள்ளது. ஸ்ரீமகாபோதி, ருவன்வெலி மகாசாய ஆகிய இரண்டு விகாரைகளும் இணைந்து காணப்படுகின்றன. இந்த இரு விகாரைகளும் பௌத்த புனிதத் தலங்களாகும்.

இந்த விகாரைகள் அமைந்துள்ள வளாகத்தில் சீமமாலக்க என்ற கட்டிடமொன்று அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் ஒரு பக்கம் நாநூறு அடி நீளமானது. ஒரு பக்கத்தில் மாத்திரம் நாற்பது தூண்கள் வரிசையாக உள்ளன. மொத்தமாக ஆயிரத்து அறுநூறு தூண்கள் இந்தக் கட்டத்தில் உள்ளன. இந்தத் தூண்கள் சிங்கள மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது.

அனுராதபுரம் இராஜ்ஜியத்தை சிங்கள மன்னர்கள் வெற்றிகரமாக ஆட்சி செய்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன் தோற்கடித்தான். இதன் காரணங்களினாலேயே கோட்டாபய ராஜபக்ச இந்த விகாரையில் பதவிப் பிரமாணம் செய்ததாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

சிறந்த ஆட்சி முறையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே கோட்டாபய ராஜபக்ச ருவன்வெலி மகாசாயவில் பதவிப் பிரமாணம் செய்ததாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.