இலங்கை அரசாங்கத்தின் புதிய

பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பு- அமைச்சரவை நாளை நியமனம்

எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு கோரி கடிதம்
பதிப்பு: 2019 நவ. 21 14:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 22 02:33
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்கியுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் ஒரு மணிக்கு பதவிப் பிரமாணம் இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தனர். கோட்டாபாய ராஜபக்ச அதிகாரபூர்வமாக பிரதமர் நியமனத்தை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினார். அதனையடுத்து இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமது கடமைகளை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்தார்.
 
பதினைந்து பேர் கொண்ட புதிய அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான பதினைந்துபேர் கொண்ட புதிய அமைச்சரவையோடு இடைக்கால அரசாங்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை செயற்படவுள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். ஈபிடிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சுப் பதவியை ஏற்கவுள்ளார்.

ஆறுமுகன் தொண்டமான், விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகியுள்ள நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவன்ச சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளார். அது குறித்த கடிதம் ஒன்றை அவர் கையளித்துமுள்ளார்.

ஆனால் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் நாற்பத்து ஐந்து உறுப்பினர்கள் கையொப்பமிட்டுக் கடிதம் ஒன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளனர்.

அத்துடன் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.