இலங்கையில் பொது மக்கள் பாதுகாப்புக்கு

முப்படையினரையும் ஈடுபடுத்துமாறு கோட்டாபய உத்தரவு- வர்த்தமானி இதழ் வெளியானது

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு தெரிவிப்பு
பதிப்பு: 2019 நவ. 23 22:58
புதுப்பிப்பு: நவ. 24 15:23
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#LKA
#gotabayarajapaksa
வடக்குக் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரையும் பொதுமக்கள் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் வர்த்தமானி இதழ் வெளியிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை கையொப்பமிட்ட வர்த்தமானி இதழ் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நாடாளுமன்றத்தினால் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முப்படையினரையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவு கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதே இதன் பிரதான நோக்கம் என்று அரசாங்கம் கூறுகிறது.
 
இலங்கை அரசியல் யாப்பில் உள்ள பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

வர்த்தமானி இதழ்
வடக்குக் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரையும் பொதுமக்கள் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்துமாறு இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டு வெளியிட்டுள்ள அரச வர்த்தமானி இதழின் ஆங்கிலப் பதிப்பு
சிவில நடவடிக்கைகளில் பொலிஸார் மாத்திரமே ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் போர்க்காலம் போன்று முப்படையினரையும் பொதுப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளமை குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரே அவசரகாலச் சட்டம் இலங்கையில் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனாலும் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொலிஸார் மாத்திரமே சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரும் பயன்படுத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வடக்குக் கிழக்கு மாகாணங்களே இந்த உத்தரவினால் கூடுதலாகப் பாதிக்கப்படுமென தாயகப் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.