இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி

கோட்டாபய சர்வதேச நீதிபதிகளை ஏற்கமாட்டார், ஜெனீவாத் தீர்மானம் நிராகரிக்கப்படும்- தினேஸ்

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்துவையும் சந்தித்தார்
பதிப்பு: 2019 நவ. 26 20:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 02:27
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் கலந்துரையாடி போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானங்களை ரத்துச் செய்யவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார். சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதித்து விசாரணைகளை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதிக்கமாட்டார் என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றபோது அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இவ்வாறு கூறியிருந்தார்.
 
போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் மைத்திரி- ரணில் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட தீர்மானங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளாரென்றும் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைச் சபையில் முன்னெடுத்த செயற்பாடுகள் தவறானதாகும். அந்தச் செயற்பாடுகளை ஏற்க முடியாதென மகிந்த ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கூறியிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30/1 பிரேரணைக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை தவறானது. ஏனெனில் போர்க்குற்றங்களுக்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் எதுவுமேயின்றி ஜெனீவாத் தீர்மானத்துக்கு அப்போதைய அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியதை இடைக்கால அரசாங்கம் ஏற்காதென்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் அந்தத் தீர்மானத்தை முற்றாகவே நிராகரிக்க ஏற்பாடு செய்யப்படுமெனவும் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனிப்பட்ட முறையில் செயற்பட்டு அந்தத் தீர்மானத்தை ஏற்றிருந்தார் எனவும் அதனை இலங்கை அரசாங்கத்தின் முடிவாக எடுக்க முடியாதென்றும் மற்றுமொரு கேள்விக்கு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்துவையும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சந்தித்து உரையாடியுள்ளார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியத் தூதுவர் பேசியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.