இலங்கையின் தலைநகர்

கொழும்பில் சுவிஸ் தூதரகப் பெண் அதிகாரி கடத்தப்பட்டமைக்குக் காரணம் கூற முடியாது- அமைச்சர் சுசில்

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சுவிஸ்லாந்துத் தூதரகத்திடம் இலங்கை கோரிக்கை
பதிப்பு: 2019 நவ. 28 20:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 29 03:29
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Switzerland
#criminal
#incident
இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்து நாட்டின் தூதரகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பாக எதுவுமே கூற முடியாதென புதிதாகப் பதவியேற்றுள்ள சர்வதேச ஒத்துழைப்புக்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பாக அரசாங்கத்துக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் ஆனாலும் கடத்தப்பட்டமைக்கான காரணிகளைக் கூற முடியாதென்றும் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். எனினும் கடத்தப்பட்டமை தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
Swiss
கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதவரை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்றுப் புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசியபோது எடுக்கப்பட்ட படம் இது.
சுவிஸ்லாந்துத் தூதரக அதிகாரி சென்ற 25 ஆம் திகதி திங்கட்கிழமை கடத்தப்பட்டு வாகனத்துக்குள் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதுவருக்கு உறுதியளித்துள்ளது.

அத்துடன் விசாரணைக்குத் தூதரகம் ஒத்துழைக்க வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ்லாந்து வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயும் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கொழும்பில் உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சில் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்ற சர்வதேச ஒத்துழைப்புக்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, சுவிஸ் தூதரக அதிகாரியொருவர் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

அதேவேளை வெளிவிவகார அமைச்சர்தினேஸ் குணவர்தன கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதுவரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக கொள்ளை தொடர்பான விசாரணைகளை நடத்திப் பிரபல அரசியல்வாதிகளின் பல ஊழல் மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகங்கள் தொடர்பான பல விடயங்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து குடும்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறியிருந்தார்.

கொழும்பு தெகிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிசாந்த டி சில்வா நடத்தி வந்தார்.

இலங்கைக் கடற்படையின் முன்னாள் தனபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுமிருந்தனர். வசந்த கரண்ணாகொட இந்த வழக்கில் பிரதான எதிரியாகவும் இனம் காணப்பட்டிருந்தார்.

அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல், த நேஷன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தமை, ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான பல்வேறு விசாரணைகளையும் நிசாந்த டி சில்வா மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே கொழும்பில் சுவிஸ்லாந்து நாட்டின் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

.