புதிய அரசாங்கத்துடன் பேசுவதற்கு

சர்வதேச மத்தியஸ்த்தம் அவசியம் என வலியுறுத்தப்படும் நிலையில் பிரித்தானியத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு

ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கு சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறை அவசியம் என்கிறார் ஜோதிலிங்கம்
பதிப்பு: 2019 நவ. 30 11:08
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 03 00:17
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#Sumanthiran
#uk
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒருவாரம் சென்றுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முதன் முறையாக கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்ரன் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். தேர்தலின் பின்னரான சூழலில் வடக்குக்- கிழக்குப் பிரதேசங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தே தூதுவர் சாரா ஹல்ரன் கேட்டறிந்து கொண்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 

கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சென்ற புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்ரன வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் நல்லிணக்கச் செயற்பாடுகளில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை. கோட்டாபய ராஜபக்சவுடன் பேசத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ.ரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளதால், ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கு சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்று அவசியம் எனவும் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான சி.ஆ ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள நிலையில், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களுக்கு சர்வதேச மத்தியஸ்த்தம் அவசியம் எனவும் அதற்கான கோரிக்கைகளை தமிழ்த் தரப்பு பகிரங்கமாக வெளியிடவில்லை எனவும் அரசியல் அவதானிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.