இந்தியாவின் நானூற்றி ஐம்பது மில்லியன் டொடலர்கள் உதவியையடுத்து

சீன விசேட பிரதிநிதி மகிந்தவுடன் சந்திப்பு- அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் குறித்து உரையாடல்

இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் போட்டிக்குள் வேறொருவிதமாகச் சிக்கப்போகும் இலங்கை
பதிப்பு: 2019 டிச. 02 10:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 03 09:51
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#china
#mahindarajapaksa
மைத்திரி- ரணில் அரசாங்கம் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருடங்களுக்குச் சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுக்குக் குத்தகைக்குக் கொடுப்பதற்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரத்துச் செய்யவுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியொருவர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். சீன- இலங்கை நட்புறவு பாதிக்கப்படாத வகையில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து மீளாய்வு செய்யும் நோக்கில் சீனாவின் விசேட பிரதிநிதி கொழும்புக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது. இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ (Wu Jianghao) விசேட பிரதிநிதியாகக் கொழும்புக்கு வந்துள்ளார்.
 
தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து உரையாடியுமுள்ளார். சீன- இலங்கை நட்புறவு பாதிக்கப்படாத வகையில் அம்பாந்தோட்;டைத் துறைமுகம் தொடர்பாகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து மீளாய்வு செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக சீனத் தூதரகம் கூறுகின்றது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான நிதியுதவிகள், தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் விசேட பிரதிநிதி வு ஜியாங்காவோ மகிந்த ராஜபக்சவுடன் பேசியுள்ளார். சந்திப்பில் கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் செங் எக்சியுஒன் (Cheng Xueyuan) உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கொழும்புக்கு வருகை தந்த சீனப் பிரதிநிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்க முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் குறித்துப் பேசியமை தொடர்பாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

2017 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். இதனால் இந்தியா கடும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா பயன்படுத்தும் என்றும் இதனால் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அப்போது இந்தியா எச்சரித்திருந்தது.

இவ்வாறானதொரு சூழலில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சென்றவாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையிலேதான் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியிருந்த ஒப்பந்தத்தை, கோட்டாபய ராஜபக்ச ரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

ரத்துச் செய்வது தொடர்பான இத்தகவலை இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகராகவுமுள்ள அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளதாக Bloomberg.com என்ற ஆங்கிலச் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கொழும்புக்கு வந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தை மீள் ஆய்வு செய்வது குறித்துப் பேசியுள்ளார். மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்திருந்ததாகச் சீனத் தூதுரகம் கூறியபோதும் இதுவரை இலங்கை அரசாங்கம் அது தொடர்பாகக் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்குக் கொடுப்பதற்காக மைத்திரி- ரணில் அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தை பதவிக்கு வந்ததும் ரத்துச் செய்வேன் என்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின்போது கூறியிருந்தார்.

சென்ற வாரம் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ச பொருளாதார ரீதியான பல திட்டங்களுக்கு இணக்கம் தெரிவித்திருந்தார். சுமார் நானூற்றி ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக இந்தியாவும் உறுதியளித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் சீனாவின் விசேட பிரதிநிதி கொழும்புக்கு வந்துள்ளார். எவ்வாறாயினும் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் போட்டிக்குள் வேறொருவிதமாக இலங்கையின் புதிய அரசாங்கம் சிக்குப்படப் போவதாகவே அவதானிகள் கூறுகின்றனர். இந்தியாவையும் சீனாவையும் இலங்கை கையாளப்போகும் புதிய உத்தி, இலங்கையில் உள்ளக முரண்பாடுகளையே மேலும் தோற்றுவிக்கலாமென அவதானிகள் கருதுகின்றனர்.