வடமாகாணம் யாழ்ப்பாணம்

புங்குடுதீவில் பாரிய கடற்படை முகாம் அமைக்க பொதுமக்களின் காணிகள் சுவிகரிப்பு

அறிவுறுத்தல் கடிதங்களை வேலணைப் பிரதேசச் செயலாளர் அனுப்பியுள்ளார்
பதிப்பு: 2019 டிச. 04 10:46
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 06 04:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடமாகாணம் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இலங்கைக் கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு சுமார் பதின்நான்கு ஏக்கர் காணியை சுவிகரிக்கவுள்ளனர். புங்குடுதீவு கிழக்கு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளே சுவிகரிக்கப்படவுள்ளன. இலங்கைக் கடற்படையின் உத்தரவுடன் வேலணைப் பிரதேச சபைச் செயலாளர் ஏ.சோதிநாதன் காணி உரிமையாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார். பதின்நான்கு நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேசச் செயலாளர் அந்தக் கடிதத்தில் கேட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
 
2016 ஆம் ஆண்டில் இருந்து மண்கும்பான் பிரதேசத்தில் உள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் இலங்கைக் கடற்படையின் உயர் அதிகாரிகள் சிலரும் இந்தக் காணிகளை அபகரிப்பதற்கு கடும் முயற்சி எடுத்திருந்தனர்.

புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமுக்குப் பொறுப்பாக இருந்த கடற்படை உயர் அதிகாரிகளும் அந்தக் காணிக்குரிய பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தனர். இந்தக் காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயில் பிரதேசத்தையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்கான கடும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புகளினால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில், கொழும்பு நிர்வாகத்தின் அனுமதியோடு இலங்கைக் கடற்படையின் கொழும்புத் தலைமைப் பீடம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு கடும் அழுத்தங்களை வழங்கியிருந்தது.

இதன் பின்னணியிலேயே இலங்கைக் கடற்படையினரால் சுவிகரிக்கப்படவுள்ள காணிச் சொந்தக்காரர்களுக்கு வேலனைப் பிரதேச சபைச் செயலாளர் கடிதங்களை அனுப்பியதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வேலணைப் பிரதேசச் செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமே நேற்றுச் செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையின் கோட்டயம்பர படைப்பிரிவுக்கே பாரிய முகாம் அமைக்கப்படவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐயம்பிள்ளை பாக்கியம், இராசையா கோணேசலிங்கம், குமாரவேலு பொன்னம்மா, சுப்பிரமணியம் மகேஸ்வரி, சின்னத்தம்பி இராசேந்திரன், அண்ணாமலை கங்காசபை, வேலாயுதபிள்ளை செல்லம்மா, கந்தையா தியாகராசா, செல்வராசு அம்பிகா, பஞ்சாசரம் தயாபரன் ஆகியோருக்குச் சொந்தமான காணிகளே இலங்கைக் கடற்படையினரால் சுவிகரிக்கப்படவுள்ளன.