கொழும்பில்

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சுவிஸ் தூதரகப் பணியாளர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் வாக்குமூலம்

கடத்தப்பட்டமைக்கு வலுவான ஆதாரங்கள் இல்லையென அரசாங்கம் தொடர்ந்து மறுப்பு
பதிப்பு: 2019 டிச. 08 22:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 09 22:07
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரக பெண் அதிகாரி கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டு இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சென்ற நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளைவானில் வைத்துக் கடத்தப்பட்டிருந்ததாக சுவிஸ்லாந்துத் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு முறையிட்டிருந்தார். இதனையடுத்து வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சுவிஸ்லாந்துத் தூதுவரைச் சந்தித்து உரையாடியிருந்தார். ஆனாலும் இந்தக் கடத்தலுக்கும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பில்லை என்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
 
அத்துடன் கடத்தப்பட்ட தூதரகப் பணியாளரும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்க மறுத்திருந்தார். இதனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென இலங்கை அரசாங்கம் சுவிஸ்லாந்துத் தூதரகத்தின் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

ஆனால் வாக்குமூலம் வழங்கும் மன நிலையில் குறித்த பணியாளர் இல்லையென்று சுவிஸ்லாந்துத் தூதரகம் கூறியிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பணியாளரை சுவிஸ்லாந்துக்கு அழைத்துச் செல்ல சுவிஸ் தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருந்தது. மருத்துவ விமானமும் தயார் நிலையில் இருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது.

கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட தூதரகப் பெண் பணியாளர் குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்காமல் சுவிஸ்லாந்துக்குச் செல்ல முடியாதென்றும் அரசாங்கம் கூறியிருந்தது.

அத்துடன் நாளை ஒன்பதாம் திகதி வரை குறித்த தூதரகப் பெண் வெளிநாடு செல்ல முடியாதென்று கொழும்பு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அத்துடன் குறித்த பெண் வாக்குமூலம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று குறித்த பெண் பணியாளர் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நாளை திங்கட்கிழமை அல்லது நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட பணியாளர் சுவிஸ்லாந்துக்குச் செல்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.