வடமாகாணம் யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் உள்ள

ஆய்வாளர் ஜோதிலிங்கத்தின் வீட்டில் கொள்ளை- ஸ்மாட் போன் இலக்கு வைக்கப்பட்டதன் நோக்கம்?

அச்சுறுத்தல் என்று சிவில் சமூக அமைப்புகள் சந்தேகம்
பதிப்பு: 2019 டிச. 09 22:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 23:20
ஜோதி
சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.ஆ. ஜோதிலிங்கம்
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கத்தின் யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் ஜோதிலிங்கத்தின் வீட்டுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்ற பொலிஸார் இருவர் குறிப்பிட்ட நபர் ஒருவரின் பெயரைக் கூறி, இவர் எங்கு இருக்கிறார். இவரைத் தெரியுமா என்று விசாரித்துள்ளனர். ஆனால் பொலிஸார் பெயர் குறிப்பிட்டுக் கேட்ட நபரைத் தனக்குத் தெரியாதென்று கூறிவிட்டதாக ஜோதிலிங்கம் தெரிவித்தார். அதன் பின்னர் அன்றிரவு எட்டு மணியளவில் அவருடைய வீட்டு அழைப்பு மணி அழுத்தப்பட்டிருக்கிறது.
 
கதவைத் திறந்து பார்த்தபோது எவரும் இருக்கவில்லையெனக் கூறிய ஜோதிலிங்கம், பின்னர் அவ்வாறு பல தடவைகள் வீட்டு அழைப்பு மணி அழுத்தப்பட்டதாகக் கூறினார்.

சந்தேகத்தினால் உடனடியாக இலங்கைப் பொலிஸாரின் அவசர சேவைப் பிரிவின் 119 இலக்கத்துக்குத் தொலைபேசி எடுத்து வீட்டு அழைப்பு மணி அழுத்தப்படும் சம்பவம் தொடர்பாக முறையிட்டதாகவும் ஆனாலும் பொலிஸார் அங்கு வரவில்லையெனவும் ஜோதிலிங்கம் கூறினார்.

பின்னர் பாதுகாப்புக்காக நண்பர்களுக்கு விடயத்தைக் கூறியதால் அவர்கள் அன்றிரவு தனது வீட்டுக்கு வந்து நள்ளிரவு வரை இருந்துவிட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு நண்பகல் 1.30க்கு வீடு திரும்பியபோது. வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாகவும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறைக் கதவுகள், அலுமாரிகள் அனைத்தும் உடைக்கப்பட்டு உடுப்புகள் கீழே போடப்பட்டிருந்தது.

ஆனால் வீட்டில் இருந்த இரண்டு கை மணிக்கூடுகளும் சிறிய தொகைப் பணமும் கொள்ளையிடப்பட்டிருக்கவில்லை. எனினும் ஜோதிலிங்கம் பாவித்த ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றும், மற்றொரு புதிய ஸ்மார்ட் கைபேசியும் கொள்ளையிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்ளைச சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தபோதும் அவர்கள் இரண்டு மணி நேரம் தாமதித்தே வந்ததாக ஜோதிலிங்கம் கூறுகிறார். வீட்டுக்கு வந்த பொலிஸார், கீழே விழுந்து கிடந்த பொருட்களை மாத்திரமே படம் எடுத்தனர்.

ஆனால் கொள்ளையிட்டவர்கள் கைரேகை அடையாளங்கள் எதனையும் பரீட்சிக்கவில்லை. அது குறித்த படங்கள் எதனையும் எடுக்கவில்லை. இன்று திங்கட்கிழமை நண்பகல் மீண்டும் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஜோதிலிங்கத்திடம் வாக்குமூலத்தை மாத்திரமே பெற்றுள்ளனர்.

மனைவி கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளைப் பிரதேசத்தில் கடைசி மகனுடன் இருக்கிறார். இரு பெண் பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளனர். இந்த நிலையில் உரும்பிராய் இல்லத்தில் ஜோதிலிங்கம் தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தமிழ்ச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக இருக்கலாமென யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தீவிரமாக ஈடுபடும் ஜோதிலிங்கம், கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் மக்கள் சார்பில் நிறுத்த வேண்டுமெனத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் சங்கடங்கள் ஏற்பட்டதால் சுயேற்சையாகப் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்தைத் தமிழ் மக்கள் ஆதரிக்க முடியும் என்று அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கருத்தும் வெளியிட்டிருந்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவில் அங்கம் வகித்திருந்த ஜோதிலிங்கம், கத்தோலிக்கத் திருச்சபையின் தமிழ் ஆயர்கள். சைவ சமயக்குருமார், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்தும் பேசியிருந்தார்.

தொடர்ந்தும் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்து விடயங்களை பகிரங்கமாகப் பேசியும் எழுதியும் வரும் நிலையில், அவருடைய வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவமும் அதற்கு முதல் நாள் இடம்பெற்ற விடயங்களும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றே தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகள் கருதுகின்றன.

64 வயதான ஜோதிலிங்கம் கொழும்புக் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர்மட தனியார் கல்லுாரியில் 25 வருடங்களாக அரசியல் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுத் தற்போது யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணியாகக் கடமையாற்றுகிறார். சிவில் சமூகச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்.

ஊடகத்துறையினரும் ஜனநாயகச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தப்படுவதாகக் கொழும்பில் செயற்படும் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் போன்ற ஊடக அமைப்புகள் அறிக்கை ஒன்றில் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.