இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவின்

விசாரணைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் சென்ற குடும்பஸ்த்தரைக் காணவில்லை

யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மனைவி முறைப்பாடு- பொலிஸார் மறுப்பு
பதிப்பு: 2019 டிச. 20 23:09
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 23 01:54
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கொழும்பில் உள்ள இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்காகக் கடந்த ஐந்தாம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் இருந்து கொழும்புக்குச் சென்றிருந்த முன்று பிள்ளைகளின் தந்தையொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 48 வயதான பரமு விஜயராஜ் என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காகக் கொழும்புக்குச் சென்று காணாமல் போயுள்ளவரின் மனைவி விஜயராஜ் சந்திரகலா வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
 
Paramu
சென்ற ஒக்ரோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி பொலிஸாரினால் வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதி இது. ஆனால் பரமு விஜயராஜ் விசாரணைக்குச் செல்லவில்லை. இதனாலேயே வீட்டுக்குச் சென்ற பொலிஸார் டிசம்பர் மாதம் ஆறாம் திகதி விசாரணைக்காகக் கொழும்புக்கு உடனடியாகச் செல்லுமாறு வற்புறுத்தியதாகவும் இல்லையேல் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்ததாகவும் மனைவி தனது முறைப்பாட்டில் கூறியதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குறித்த பெயருடைய நபர் விசாரணைக்காக வரவில்லையென கொழும்பில் உள்ள இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் அறிவித்துள்ளது.

சென்ற ஐந்தாம் திகதி வல்வெட்டித்துறையில் உள்ள வீட்டிலிருந்து கொழும்புக்குச் சென்றதாகவும் ஆறாம் திகதி காலை ஆறு மணிக்கும் ஏழு மணிக்குமிடையில் தொலைபேசியில் உரையாடிய கணவர், தான் கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்துக்குச் செல்லவுள்ளதாகவும் கூறியதாக மனைவி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

இந்தத் தொலைபேசி உரையாடலின் பின்னர் கணவர் இதுவரை தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கணவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இன்று வரை எதுவுமே தெரியவில்லையெனவும் மனைவி சந்திரகலா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கணவர் கொழும்புக்குச் செல்வதற்குச் சில நாட்களுக்கு முன்னர் ஏழுபேர் பொலிஸார் எனக் கூறி வீட்டுக்கு வந்து விசாரணை நடத்திய பின்னர், ஆறாம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு உடனடியாகச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் கிளை அலுவலகத்தில் 16 ஆம் திகதி திங்கட்கிழமை முறைப்பாடு செய்த பின்னர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்திருந்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சென்ற ஒக்ரோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி பொலிஸாரினால் கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பரமு விஜயராஜ் விசாரணைக்குச் செல்லவில்லை.

இதனாலேயே வீட்டுக்குச் சென்ற பொலிஸார் டிசம்பர் மாதம் ஆறாம் திகதி விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும் இல்லையேல் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்ததாகவும் மனைவி தனது முறைப்பாட்டில் கூறியதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் என்ன காரணத்திற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்பதற்கான விபரங்கள் எதுவும் பொலிஸாரின் கடிதத்தில் கூறப்படவில்லை.