வடக்குக்- கிழக்குக் கடல் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஆகியவற்றை இலக்கு வைத்து

கொழும்புக்கு வருகை தந்த இந்தியக் கடற்படைத் தளபதி

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலருடன் உயைாடல்
பதிப்பு: 2019 டிச. 23 23:07
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 25 23:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#indiannavy
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை சென்ற சனிக்கிழமை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். இலங்கை இந்தியக் கடற்படையினர் மேற்கொள்ள வேண்டிய கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
 
இந்திய இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு, புலனாய்வு குறித்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சென்றிருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அங்கு இலங்கைக் கடற்படை அதிகாரிகளோடு கலந்துரையாடினார். அத்துடன் கிழக்கு மாகாணக் கடற்பாதுகாப்பு விடங்கள் குறித்தும் அவர் அறிந்துகொண்டார்.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இலங்கையில் நான்கு நாட்கள் தங்கியிருந்த போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

வடக்குக்- கிழக்கு கடற்பகுதி அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டே இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இலங்கைக்குப் பயணம் செய்ததாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இலங்கைக்குப் பயணம் செய்தமை தொடர்பாக கொழும்பில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள் முக்கியத்தும் கொடுக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை.