ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களைத் தடுக்க

சுயாதீன நீதிமன்றம் அமைக்குமாறு கோருகிறார் சஜித் பிரேமதாச

ஈழத் தமிழர்கள் குறித்து இதுவரை வாயே திறக்காத நிலையில் இலங்கை நீதித்துறை பற்றி அவருக்கு எழுந்த சந்தேகம்
பதிப்பு: 2019 டிச. 23 23:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 25 23:48
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பதவியேற்ற பின்னர், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது. முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படலாமென ஐக்கியதேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது. மகிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
 
இந்த நிலையில் வாகன விபத்துத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவுக்கு சுயாதீன நீதிமன்றம் சரியான நீதியை வழங்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் இந்த அரசாங்கம் ஈடுபடுவதாகவும் சஜித் பிரேமதமதாச தெரிவிக்கிறார். கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கத்தில் இலங்கை நீதித்துறை சுயாதீனமாகச் செயற்படுமா என்ற சந்தேகங்களையே ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கின்றது போல் தெரிவதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இவ்வாறானதொரு நிலையிலேதான் சுயாதீன நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டுமென சஜித் பிரேமதமதாச கூறியிருக்கலாமென கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வாதிகாரமாக அதிகாரத்தைப் பிரயோகித்து ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது என்றும் சஜித் பிரேமதாச கூறுகிறார். கொழும்பு விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் மதவழிபாடு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான கைதுகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள சுயாதீன நீதிமன்றம் ஒன்று அவசியமென சஜித் பிரேமதாச அங்கு வலியுறுத்தினார். அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயக மறுப்புக்கு எதிராகப் போராட வேண்டுமெனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற தொனிப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் இலங்கை நீதித்துறை பௌத்த தேசியவாதக் கண்ணோட்டதுடனேயே செயற்பட்டு வருகின்றதென ஈழத் தமிழ் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரைக்கும் இலங்கை நீதித்துறை பற்றி வாயை திறக்காத சஜித் பிரேமதாச தற்போது தங்கள் கட்சிசார்ந்த நலன்களுக்காக சுயாதீன நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு கோருகிறார்.

அதுவும் தனியே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை மாத்திரம் பாதுகாக்கும் நோக்கிலேயே சுயாதீன நீதிமன்றத்தைக் கோருகின்றார். ஆனால் பாதிக்கப்படுகின்ற ஏனைய சிங்கள மக்களுக்காகவேனும் அவர் சுயாதீன நீதிமன்றத்தைக் கோரவில்லை என்ற கருத்துக்களும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.