இலங்கையின் இறைமைக்கு எதிரான

ஜெனீவாத் தீர்மானத்தை எதிர்கொள்ள இலங்கை தயார்- சுசில்

இலங்கைக்கு ஆதரவான நாடுகளோடு பேசவுள்ளதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2019 டிச. 24 23:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 25 23:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தையும் அதன் மூலம் எழவுள்ள சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் ஏனைய அரச நிறுவனங்களிடையே தொடர்புடைய அனைத்து விடயங்களையும் புதிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
 
இலங்கையின் இறைமைக்குச் சவால் ஏற்படக் கூடிய முறையில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கைச் சுயாதீன நீதித்துறை ஆகியவை மீது ஜெனீவா குற்றங்களை முன்வைக்க முடியாதென்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் சர்வதேசத்தில் உள்ள பொது அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்கள் இலங்கை மீது காட்டமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. இலங்கை தொடர்பான சர்வதேச அமைப்புகளின் நிலைப்பாடுகள் கடுமையானதாக உள்ளன. இதனால் இலங்கைக்கு ஆதரவாகவுள்ள நாடுகளுடன் இணைந்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை செயற்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மனித உரிமைச் சபையில் சவால்களை எதிர்கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன, அமைச்சின் உயர் அதிகாரிகள் கூட்டாகச் செயற்பட்டு வருகின்றன. இலங்கை உயர்மட்டக்குழு ஒன்று ஜெனீவாவுக்கும் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.