தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதாகக் குற்றம் சுமத்தி

விசாரணைக்காகச் சிவாஜிலிங்கம் கொழும்புக்கு அழைப்பு

இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கடிதத்தை யாழ் பொலிஸார் இன்று கையளித்தனர்
பதிப்பு: 2019 டிச. 25 23:12
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 26 00:28
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடக்குக்- கிழக்குத் தாயகத்தை மையப்படுத்தி இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.க. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள இலங்கைப் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவின் தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து விசாரணைக்கான அழைப்புக் கடிதத்தை ஒப்படைத்ததாகச் சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
இந்த ஆண்டு மே மாதம் தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டமை தொடர்பாகவே பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்காகத் தன்னால் கொழும்புக்குச் செல்ல முடியாதென்றும் வேறொரு திகதியைக் கோரவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மே மாதம் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டு ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது விசாரணைக்காக அழைக்கப்படுவதன் நோக்கம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விசாரணைக்கு அழைக்கப்படுவதன் மூலம் எங்களை மிரட்டி மக்களை அச்சுறுத்தி இராணுவ ஆட்சியைக் கொண்டுவருவதுதான் நோக்கமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று முடிவடைந்த பின்னரே தன்னால் கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிவாஜிலிங்கம், சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் சுயேற்சையாகப் போட்டியிட்டிருந்தார். அத்துடன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ரெலோ இயக்கத்தில் இருந்து விலகி சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் தமிழ் தேசியக் கட்சியைப் புதிதாக உருவாக்கி அதன் செயலாளராகவும் கடமையாற்றுகின்றார்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் நெருக்கடியான காலகட்டங்களில் ஈழத் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளில் துணிவுடனும் பரபரப்பாகவும் ஈடுபட்ட சிவாஜிலிங்கம், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அச்சுறுத்தல்களின் மத்தியில் நடத்தியிருந்தார்.

இதனால் அந்த நெருக்கடியான காலகட்டங்களில் பல தடவை கொழும்பில் உள்ள இலங்கைப் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவின் தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.