ஆயுதப் போராட்டக் காலத்திலும் அதற்கு முன்னரான சூழலிலும் வெளியாகியிருந்த

ஈழத் தமிழ் நூல்கள் பற்றிய தகவல்களை அறிந்திருந்த நூலகர், எழுத்தாளர் சிறீக்காந்தலட்சுமி காலமானார்

பெண் போராளிகளின் கல்வித் தரத்தை மேற்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தவர்
பதிப்பு: 2019 டிச. 26 22:47
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 02 00:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#jaffnauniversity
ஈழத் தமிழ் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் நூல்களைப் பாதுகாத்து வந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகர் சிறீக்காந்தலட்சுமி அருளானந்தம் மாரடைப்பினால் நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். ஈழத் தமிழ் எழுத்துலக வளர்ச்சியில் பெரும் பங்களிப்புச் செய்த இவர், ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் பெண் போராளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கினார். விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிகழ்ச்சித் தயாரிப்புகளிலும் ஈடுபட்டிருந்தார். போராட்ட காலத்தில் வெளிவந்திருந்த நூல்கள். கவிதைகள் போன்றவற்றை ஆவணப்படுத்தியிருந்தார். சில நூல்களை யாழ் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாகவும் வளங்கியுள்ளார்.
 
கூடுதலாக ஆயுதப் போராட்டக் காலத்திற்கு முன்னரான சூழலிலும் அதன் பின்னரான நிலையிலும் வெளிவந்திருந்த ஈழத் தமிழ் இலக்கிப் படைப்புகள், நூல்கள் பற்றிய தகவல்களை நன்கு அறிந்திருந்தாார்.

வானதி வெளியீட்டகத்தின் நூல்கள் பலவற்றிலும் சிறீகாந்தலட்சுமியின் படைப்புக்கள் வெளியாகியிருந்தன. குறிப்பாக நூலக அபிவிருத்தி ஒரு பயில் நோக்கி, சொற் பொருளாய்வுக் களஞ்சியம், நூலகத் தகவல் அறிவியல், நூலகத் தகவல் அறிவியல் ஆய்வுக்கோவை ஆகிய நூல்களையும் இவர் வெளியிட்டிருக்கின்றார்.

கூடுதலாகப் பெண்களின் உரிமைகள் சார்ந்த பல விடயங்களை எழுதியுள்ள இவர், அந்த அடிப்படையிலேயே பெண் போராளிகளுக்கான வாசிப்புப் பழகத்தையும் ஊக்குவித்திருந்தார். ஆங்கிலக் கல்வியையும் இவர் போதித்தார்.

தமிழ் மொழிப் புலமையுடன் கூடிய ஆங்கில அறிவும் இருந்தமையினால் தமிழ் இயல் சார்ந்த விடயங்கள் சிலவற்றை ஆங்கில மொழியிலும் எழுதியுள்ளார். கட்டுரைகள், கவிதைகள் போன்ற படைப்புகளையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பாவனைப்பொருட்கள் பலவற்றை சேகரித்துச் சேமித்து வைத்திருந்து தன்னுடைய வீட்டில் சிறிய அளவிலான ஆவணக்காப்பகம் ஒன்றையும் உருவாக்கி அதனைப் பேணிப்பாதுகாத்து வந்தார்.

இந்தப் பாரம்பரிய ஆவணங்களை இளம் தமிழச் சமுதாயத்துக்குக் காண்பிக்க வேண்டுமென ஆர்வம் கொண்டிருந்தார். பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இவருடைய ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட்டிருக்கின்றனர். பலர் ஆய்வுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர்.

1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இனுவில் பிரதேசத்தில் பிறந்த சிறிக்காந்தலட்சுமி, யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுப் பொருளியல் பட்டத்தைப் பெற்றார். அதன் பின்னர் இந்தியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தகவல் அறியும் ஆவணப்படுத்தல் பட்டப் பின்படிப்பை மேற்கொண்டார்.

நூலகத்தை எவ்வாறு பேணிப் பாதுகாத்தல் என்பது தொடர்பான ஒழுங்கு விதிகள் பற்றிய பாடத்தில் விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழகத்தில் இவர் கடமையாற்றியுள்ளார். சிறந்த தமிழ் இலக்கிய விமர்சகராகவும் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் பற்றிய தகவல்களை அறிந்தவராகவும் சிறீக்காந்தலட்சுமி விளங்கினார்.

இவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலர் சிறீக்காந்தலட்சுமியின் ஈழத் தமிழ் நூல்கள் பற்றிய அறிவைப் பாராட்டியிருந்தனர்.