கொழும்பில் உள்ள இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்து சிவாஜிலிங்கத்திடம் விசாரணை

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2019 டிச. 28 23:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 02 00:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இறுதிப் போரில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியமை தொடர்பாகவே இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தன்னிடம் விசாரணை நடத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பின் செயலாளருமான ம.க. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு இன்று சனிக்கிழமை விசாரணைக்குச் சென்று திரும்பிய பின்னர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தமிழ் இன அழிப்பு வாரம் தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு வருமாறு சிவாஜிலிங்கத்துக்குச் சென்ற புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
இதனால் இன்று கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குப் பத்து மணிக்குச் சென்ற சிவாஜிலிங்கத்திடம் பிற்பகல் 2.30 வரை விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட நினைவேந்தல் தொடர்பாகவே வாக்குமூலம் பெறப்பட்டதாக சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை நடத்தியதன் நோக்கம் இதன் பின்னணியில் இருப்பவர்கள் பற்றிய விபரங்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கேட்டிருந்தனர். தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்களை நீதிமன்ற உத்தரவுடன் பெற்று அதில் கூறப்பட்டிருந்த விடயங்களை தொலைக்காட்சியில் காண்பித்தும் கேள்வி கேட்டிருந்தனர்.

அத்துடன் மடிக் கணணியில் இருந்தும், வாக்குமூலம் வழங்கிய அறைக்கு வெளியில் இருந்து அவ்வப்போது வேறு சிலர் கொண்டு வந்து கொடுத்த கேள்விகளையும் தன்னிடம் கேட்டதாக சிவாஜிலிங்கம் கூறினார்.

2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் இனப் படுகொலைகள் தொடர்பான நினைவேந்தல்களை நடத்தி வருவதாகவும் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதால் இந்த நிகழ்வை மக்கள் நடத்துவதாகவும் தான் கூறியதாக சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஏன் கோருகின்றீர்கள், அரசியல் கைதிகள் என்றால் யார் என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு ஏன் கோரிக்கை விடுக்கின்றீர்கள் எனவும் கேள்விகள் கேட்கப்பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்தக் கேள்விகள் திட்டமிடப்பட்ட முறையில் கேட்கப்பட்டதாகவும் பெறப்பட்ட வாக்குமூலத்தை இலங்கைச் சட்டமா அதிகாரியிடம் கையளித்து தன்னைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய நிலை தென்படுவதாகவும், ஏனெனில் தேவை ஏற்படும் போது மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள் என பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தன்னிடம் கூறியதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

சிவாஜிலிங்கம் சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.