வெள்ளைவான் கடத்தல் விவகாரத்தைப் பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டு- முன்னாள் அமைச்சர்

ராஜித சேனரட்னவை ஒழித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்திரிகாவைக் கைது செய்யுமாறு தயாரட்ன தேரர் அழுத்தம்

வைத்திய நிபுணர் முபாரக் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
பதிப்பு: 2019 டிச. 29 23:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 02 00:33
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#rajithasenaratne
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது கொழும்பில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல் விவகாரத்தைப் பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனரட்னவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் ராஜித சேனரட்னவைக் கைது செய்யவிடாமல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நான்கு நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்ததாகச் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் கூறியுள்ளார். எனவே குற்றவாளியொருவரைப் பாதுகாத்த குற்றச்சாட்டில் சந்திரிகாவைக் கைது செய்ய வேண்டுமெனவும் தேரர் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு டொரிங்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ராஜித சேனரட்னவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பாதுகாப்பாக வைத்திருந்து கொழும்பு நாரஹோன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க உதவியதாக அக்மீமன தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவைக் கைது செய்யுமாறு பல சிங்கள அமைப்புகள் கொழும்பு ரொறிங்ரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அக்மீமன தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பின்னர் ரஜித சேனரட்னவை ஒழித்து வைத்திருந்தமை தொடர்பாக இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்திரிகாவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற வேண்டுமெனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ராஜித சேனரட்னவின் வைத்திய நிபுணர் முபாரக் பொய்யான மருத்துவக் காரணங்களைக் கூறி சிகிச்சை அளிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள நவ சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரியசாத், வைத்தியர் முபாரக்கிடம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரியுள்ளாா்.

இலங்கை அரச சட்ட வைத்திய அதிகாரியொருவர் ராஜித சேனரட்னவை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் டான் பிரியசாத் கூறியுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராஜித சேனரட்னவை இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் அவரை சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்ற முடியாதென வைத்திய நிபுணர் முபாரக் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால் சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே வைத்திய நிபுணர் முபாரக்கிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.