இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்-

ரிஷாட் பதியுதீனிடம் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்

ஹக்கீமிடம் வாக்குமூலம் பெற ஏற்பாடு- மைத்திரி- ரணில் ஆகியோரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
பதிப்பு: 2019 டிச. 30 22:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 02 00:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#eastersunday
#attacks
இலங்கையில் சென்ற ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்பில்லையென இலங்கைப் பொலிஸாரே கூறியிருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
 
சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் தீர்மானித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று ரிஷாட் பதியுதீனிடம் மூன்று மணிநேர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடத்தப்படுமெனவும் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கூறியுள்ளனர். ரவூப் ஹக்கீமிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித ஆகியோரிடமும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு கொழும்புப் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன் அனுமதி பெற்றுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது நியமிக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் பலரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றிருந்தது. அத்துடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை நடத்தி அறிக்கையை மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பித்திருந்தது.

இந்த நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பத்தில் இருந்து இடம்பெறுகின்றது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் சிங்களப் பெண்களுக்குச் சட்ட விரோதக் கருத் தடை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் முஹம்மட் ஷாபி மீது மீண்டும் ஆரம்பத்தில் இருந்து புதிதாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் சென்ற 23 ஆம் திகதி உத்தவிட்டிருந்தார்.

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வைத்தியர் சேகு சிஹாப்தீன் முஹம்மட் ஷாபி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.