இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்குள்ளான

சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமனத்தை வழங்கினார்
பதிப்பு: 2019 டிச. 31 23:16
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 02 00:29
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத் தளபதியாகப் பதவி வகிக்கும் லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமைப் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கை இராணுவத் தளபதி என்ற பதவிக்கு மேலதிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஈழப் போரின் போது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் விவகாரங்களில் சர்வதேச அரங்கில் பலத்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான சவேந்திர சில்வா, கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
 
இதனால் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன. இராணுவத் தளபதிப் பதவியில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்பட வேண்டுமெனவும் அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன குறித்த பதவியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை விலகியதை அடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்னவை நியமித்திருந்தார். இவருக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு சேவை நீடிப்பு 2019 ஓகஸ்ட் 22ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது.

ஆனாலும் மைத்திரிபால சிறிசேன, இந்த ஆண்டு டிசெம்பர் 31 வரை சேவை நீடிப்பை வழங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று அவருடைய பதவிக்காலம் முடிவடைந்து அவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இதனால் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக சர்ச்சைக்குரிய சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2015 முதல் 2017 வரை இலங்கை கடற்படைத் தளபதியாகவும் பணியாற்றியிருந்தார்.