கொழும்பில் உள்ள இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்

வடக்குக்- கிழக்கில் விகாரைகள் தொடர்பான ஆய்வுகள்

ஆய்வின் அடிப்படையில் அருகில் உள்ள குடியேற்றங்களை வேறு இடங்களிற்கு மாற்றவும் திட்டம்
பதிப்பு: 2020 ஜன. 02 12:33
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 01:58
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பில் உள்ள புத்தசாசன அமைச்சு சிறப்பு ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமென அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிச்சந்திர கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பில் உள்ள தொல்பொருட் திணைக்களத்துடன் இணைந்து புத்த சமய வரலாறுகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறிய அவர் புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாகவே அனைத்துச் சிறப்பு ஆய்வுகளும் இடம்பெறும் என்றும் கூறினார். வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள விகாரைகளின் அமைவிடம் அதன் வரலாறுகள், அந்த விகாரைகளின் தற்போதைய நிலை என்பவற்றைக் குறித்த ஆய்வின் மூலமாகப் பெறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
 
ஆலயங்கள் பற்றிய ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறினாலும் புத்த விகாரைகள் பற்றிய ஆய்வுகளே நடத்தப்படவுள்ளதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த்தரப்பு அமைதிகாப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

முதலில் பெறப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் அந்த விகாரைகளின் மேலதிக புனருத்தாரனம் மற்றும் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆய்வின் அடிப்படையில் குறித்த விகாரைகள் அமைந்துள்ள இடங்களில் குடியேற்றங்கள், பொதுக் கட்டடங்கள் இருக்குமானால் அவற்றை அப்புறப்படுத்தி அதற்கு வேறு இடங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்குக் கிழக்கில் நூற்றி 81 புத்தர் சிலைகள், விகாரைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கைப் படைகளின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்ட வரலாறுகளையும் இலங்கை அரசாங்கம் எழுதியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் வடக்குக்- கிழக்கில் புத்த விகாரைகள் தொடர்பான சிறப்பு ஆய்வை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் போது அமைச்சராக இருந்த மனோ கணேசன், இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டுமெனக் கூறியிருந்தார்.

அதன்படி ஐந்து தமிழர்கள் இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று அப்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரையும் தமிழர்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களைக் கொண்ட இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் வடக்குக்- கிழக்கில் விகாரைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்போது தமிழர் மரபுரிமைகள் பாதிக்கப்படலாமெனக் கூறப்படுகின்றது.

ஆலயங்கள் பற்றிய ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறினாலும் புத்த விகாரைகள் பற்றிய ஆய்வுகளே நடத்தப்படவுள்ளதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த்தரப்பு அமைதிகாப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.