இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி என்ற முறையில்

பாதுகாப்பு அமைச்சைத் தன்வசப்படுத்த கோட்டாபய முயற்சி

நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பித்து ஜனாதிபதிக்குரிய அமைச்சுக்களை ஒதுக்க ஏற்பாடு
பதிப்பு: 2020 ஜன. 02 21:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 01:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய முறையில் தனி நபர் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின்21, 22 ஆவது திருத்தங்கள் என இலங்கை அரச வர்த்தமானி இதழில் வெளியிடப்படும் என்று விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு உருவாக்கிய 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சில திணைக்களங்களின் பொறுப்புக்களை ஜனாதிபதி வைத்திருக்க முடியாது.
 
நீதிபதிகள், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கப்படுவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி இந்த நியமனங்கள் இலங்கைச் சுயாதீன ஆணைக்குழுக்களினாலேயே வழங்கப்பட்டு வந்தன

எனவே ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய அமைச்சுக்களை ஒதுக்கீடு செய்வதில் உள்ள சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தனி நபர் பிரேரணையைச் சமர்ப்பித்து விளக்கமளிக்கவுள்ளதாக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் யாப்பின் பிரிவு 43 இன் கீழ் புதிய திருத்தமாகக் கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேரணையில் குறிப்பிட்ட சில முக்கியமான அமைச்சுக்களை ஜனாதிபதி தேசிய பாதுகாப்புக் கருதி வைத்திருக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிபதிகள், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கப்படுவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி இந்த நியமனங்கள் இலங்கைச் சுயாதீன ஆணைக்குழுக்களினாலேயே வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அந்த நடைமுறைகளை மாற்றியமைக்கும் யோசனைகளை விஜேதாச ராஜபக்ச, ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவின் ஆலோசனையுடன் முன்வைப்பதாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச பதவி வகித்து வரும் நிலையில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள பாதுகாப்பு அமைச்சராக இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கைச் சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்த கோட்டாபய ராஜபக்ச முற்படுகிறார். ஆனால் விஜேயதாச ராஜபக்ச சமர்ப்பிக்கவுள்ள தனி நபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் ஏற்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் சில பகுதிகளில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் நகல் சட்டமூலம் சமர்ப்பிக்கக்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

குறித்த தனிநபர் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அதிகாரபூர்வமாகக் கருத்து வெளியிட முடியுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.