ஒற்றையாட்சியைப் பாதுகாத்து

சர்வதேச நாடுகளுடன் சமநிலையாக இலங்கை உறவுகளைப் பேணும்- கோட்டாபய ராஜபக்ச

நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கை பின்பற்றப்படும் என்றும் கூறுகிறார்
பதிப்பு: 2020 ஜன. 03 15:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 01:49
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கையின் ஒற்றையாட்சியையும் புத்தசாசனத்தையும் தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்கவுரையில் உறுதிப்படக் கூறியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை கோட்டாபய ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார். ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முதலாவது அமர்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை நிகழ்வில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும் பங்குபற்றினர். பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் அப்போதுதான் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
 
அனைத்து நாடுகளோடும் நட்புறவுகளைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனாலும் ஒருபோதும் இலங்கையின் சுயாதீனத் தன்மையை விட்டுக் கொடுக்க முடியாது.

கோட்டாபய ராஜபக்சவின் உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ, ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை. அத்துடன் புவிசார் அரசியில் இலங்கையின் முக்கியத்துவம் என்று மாத்திரமே கூறப்பட்டுள்ளது. ஆனால் புவிசார் அரசியலில் வழமையாகப் பயன்படுத்தப்படும இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்ற வார்த்தையைத் தனது உரையின் எந்த இடத்திலும் கோட்டாபய ராஜபக்ச உச்சரிக்கவேயில்லை

இராஜதந்திர உறவுகளின் போது அல்லது சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போதும் எந்தவொரு வெளிநாட்டின் முன்னிலையிலும் மண்டியிடாத இலங்கையின் இறைமையை எப்போதும் பாதுகாக்கின்ற, எந்தவொரு நாடோடும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் தேசிய அபிமானத்தைப் பாதுகாக்கின்ற கௌரவமான ஆட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கோடாபய ராஜபக்ச கூறினார்.

இலங்கையின் விசேட அமைவினால் உலகரீதியான புவி அரசியலினுள் முக்கிய கவனம் தற்போது இலங்கையின்பால் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையொன்றைப் பின்பற்றவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கையின் உன்னதமான அரசியல் யாப்பின்படி பதவிக்காலத்தினுள் இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையைப் பாதுகாப்பேன் என்றும் புத்தசாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பேன் என்றும் அதேபோன்று எந்தவொரு பிரசையும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை எப்போதும் காப்பேன் என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறினார்.

ஜனநாயக ரீதியிலான இராச்சியமொன்றில் வெற்றிகர நிலைமை தங்கியிருக்கும் அடிப்படையாவது அரசியலமைப்புச் சட்டமாகும். 1978 தொடக்கம் 19 தடவைகள் திருத்தப்பட்ட எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற மற்றும் குழப்பமான தன்மையினால் தற்காலத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதாயின் தற்போது இருக்கின்ற அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவே வேண்டும்.

விகிதாசார வாக்கெடுப்பு முறையில் உள்ள ஆக்க முறையிலான இலட்சணங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளையில் நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காகத் தற்கால தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

இலக்கங்களினால் தேர்தல்களை வெல்லக் கூடியதாகவிருப்பினும் தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத அடிப்படை வாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ந்து கீழ்படியும் நிலையற்றதொரு நாடாளுமன்றம் ஒரு நாட்டிற்குப் பொருந்தாது. மக்களின் இறையாண்மையை உறுதி செய்கின்ற வலுவான சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சுயாதீன நீதிமன்றம் ஸ்தாபித்தலை சட்டரீதியான மாற்றத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் நிலப் பிரதேசங்கள் அல்லது பௌதீக வளங்களை ஒருபோதும் வேறொரு நாட்டிற்கு உடமையாக்காதிருத்தல் பிரதான கொள்கையாகும். இலங்கையரை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவமான இனமாக்குவது பிரதான அபிலாஷையாகும் என்று கோட்டாபய ராஜபக்ச நீண்ட உரையொன்றை நிகழ்த்தினார்.

கோட்டாபய ராஜபக்சவின் உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ அல்லது ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை. அத்துடன் புவிசார் அரசியில் இலங்கையின் முக்கியத்துவம் என்று மாத்திரமே கூறப்பட்டுள்ளது. ஆனால் புவிசார் அரசியலில் வழமையாகப் பயன்படுத்தப்படும இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்ற வார்த்தையைத் தனது உரையின் எந்த இடத்திலும் கோட்டாபய ராஜபக்ச உச்சரிக்கவேயில்லை.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, தொழில்நுட்பம். சர்வதேச வர்த்தகம் ஆகிய விடங்களுக்கே ஜனாதிபதியின் உரையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.